உதவி அறுவை சிகிச்சை டாக்டர்கள் 465 பேரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் ஐகோர்ட்டில் வழக்கு

அரசு மருத்துவமனைகளில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர்கள் 465 பேரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

Update: 2017-12-13 00:07 GMT
மதுரை,

மதுரை மருத்துவக்கல்லூரி முதுகலை மாணவி லட்சுமி காயத்ரி உள்பட 70-க்கும் மேற்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழக அரசு மருத்துவமனைகளில் 744 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்கள்(சிறப்பு மருத்துவம்) பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 20.9.2017-ல் மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் இதுவரை 465 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நியமனம் 1998-ம் ஆண்டின் மருத்துவ ஆசிரியர்கள் நியமன விதிகளின்படி நடக்கவில்லை. இந்த நியமனத்தில் விதிப்படி அரசு மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் முதுகலை டாக்டர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.

உத்தரவிட வேண்டும்

தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து பணி அனுபவம் பெறாதவர்கள் உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை. எனவே 20.9.2017-ல் வெளியிடப்பட்ட அறிவிப்பாணை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 465 உதவி அறுவை சிகிச்சை டாக்டர்கள் நியமனத்தை ரத்து செய்யவும், புதிய அறிவிப்பு வெளியிட்டு விதிமுறைகளை பின்பற்றி நியமனங்களை மேற்கொள்ளவும், இந்த நியமனத்தில் பணியிலுள்ள முதுகலை மாணவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் உத்தரவிட வேண்டும். அதுவரை புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 465 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பணிபுரிய தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கை அங்கு மாற்றுவதற்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்