சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு கூறியபோது கோர்ட்டு வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட 3 பேருக்கு அடி-உதை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் தகராறில் ஈடுபட்ட 3 பேரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.

Update: 2017-12-12 23:15 GMT
திருப்பூர்,

தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. இந்த தீர்ப்பின் விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருப்பூர் லட்சுமி நகரில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் வழக்கத்தை விடவும் நேற்று அதிக அளவில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனால் கோர்ட்டு வளாகம் நேற்று காலையில் இருந்தே பரபரப்பாக இருந்தது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் மதியம் 1.30 மணியளவில் தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்த மகளிர் அமைப்பினரும், பொதுமக்களும் நீதி வென்றுள்ளது என்று பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர். இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் அமிர்தம் நிருபர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் திடீரென அமிர்தத்திடம் ‘நீங்கள் சாதி ஒழிப்பு போராளியா?, நீங்கள் சாதி ஒழிப்பு போராளியா? என ஆவேசமாக கூச்சல் போட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அமிர்தம் ‘அதை நீங்கள் கேட்பதற்கு என்ன காரணம் என்று அந்த நபர்களை பார்த்து கேட்டார். அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் அந்த 3 வாலிபர்களையும் எச்சரித்தனர். ஆனால் அதை பொருட்படுத்தாமல் மாதர் சங்க நிர்வாகிகளிடம் தகராறு செய்யத்தொடங்கினர். இதனால் எரிச்சலடைந்த பொதுமக்கள் அந்த 3 வாலிபர்களையும் பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். சிலர் செருப்பாலும் அவர்களை தாக்கினர். இதன்காரணமாக அங்கு நின்ற பலரும் பயந்து அங்கும், இங்குமாக சிதறி ஓடினார்கள். இதனால் கோர்ட்டு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் அந்த நபர்களை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். ஆனால் போலீசார் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற மகளிர் அமைப்பினர், ‘அவர்களை தப்பித்து செல்ல விடக்கூடாது என்றும், உடனடியாக அவர்களை கைது செய்ய வேண்டும்’ என்றும் கூறி, போலீஸ் வாகனத்தை வழிமறித்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் முடிந்த சுமார் 30 நிமிடத்திலேயே கோர்ட்டு வளாகத்தில், பார்வார்டு பிளாக் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் அங்கு வந்தார். அவர் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார். உடனடியாக அங்கு நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்புக்காக நின்ற போலீசார் கோஷமிட்ட அந்த நபரை பிடித்து வலுக்கட்டாயமாக கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.

ஆனால், கோஷங்கள் எழுப்பியபடி கோர்ட்டு வளாகத்தில் சாதிய மோதலுக்கு வழி வகுக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினார்கள். தொடர்ந்து கோர்ட்டு வாசலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தவர்களை வெளியேற்றியதுடன், கோர்ட்டு வாசலையும் போலீசார் மூடினார்கள். வழக்கு தீர்ப்பு வெளியானதில் இருந்து கோர்ட்டு வளாகம் பரபரப்புடனேயே காணப்பட்டது. 

மேலும் செய்திகள்