ஆத்தூரில், பொதுமக்கள் சாலைமறியல் பள்ளிக்கூட வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற கோரிக்கை
பள்ளிக்கூட வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி, ஆத்தூரில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், தூத்துக்குடி–திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி,
ஆத்தூர் 14–வது வார்டு முஸ்லிம் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், கடந்த 10 நாட்களுக்கு மேலாக பள்ளிக்கூட வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, பள்ளிக்கூட வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி, நேற்று காலையில் மாணவ –மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். அவர்களுடன், பெற்றோர்கள், பொதுமக்கள் சேர்ந்து பள்ளிக்கூடம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி– திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அந்த பகுதிக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து நிர்வாக அலுவலர் பிரபா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரகுராஜன், சப்– இன்ஸ்பெக்டர் பச்சமால், வருவாய் ஆய்வாளர் பொன்செல்வி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பள்ளிக்கூட வளாகத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் வாறுகால் மற்றும் சிறிய பாலம் அமைக்க ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்த சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலையில் பள்ளிக்கூடம் வழக்கம் போல் நடந்தது.