பனப்பாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர் கலெக்டரிடம் மனு

பனப்பாக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட 4 மாணவிகளின் பெற்றோர், குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் ராமனிடம் மனு வழங்கினர்.

Update: 2017-12-11 23:05 GMT
வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பாகாயம் 45-வது வார்டு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. எங்களுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. வாரம் ஒருமுறை மட்டுமே வினியோகிக்கப்படுகிறது. எனினும் அனைவருக்கும் கிடைக்கவில்லை. பம்ப் ஆபரேட்டர் சரிவர தண்ணீர் விடுவதில்லை.

மேலும் அங்கன்வாடி அருகில் அரசுக்கு சொந்தமான தெருவை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. யாராவது இறந்துவிட்டால் உடலை கொண்டு செல்வதில் சிரமமாக உள்ளது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் ரேவதி, தீபா, சங்கரி, மனிஷா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர்கள் திட்டியதாக கூறி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கியது. இதை அவர்களின் பெற்றோர் வாங்க மறுத்து விட்டனர்.
அப்போது அவர்கள் 2 கோரிக்கைகள் முன் வைத்தனர். அதில் எங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மாணவிகளின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும்.

மேற்கண்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றினால் அரசின் நிவாரண தொகையை பெறுகிறோம் என்றனர். ஆனால் இதுவரை இந்த கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராமன் அவர்களிடம், மனு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அரசு தரும் நிவாரண தொகையை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

வேலூர் முத்துமண்டபம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் ‘எங்கள் பகுதியில் ஒரு தனியார் ஓட்டல் பின்புறம் உள்ள பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த இடத்தை அந்த ஓட்டல் உரிமையாளர் தன் இடம் என்று கூறி பாதை தர மறுக்கிறார். மாற்று பாதை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. ஆனால் நாங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பாதை தான் வசதியாக உள்ளது. எனவே அந்த பாதையை எங்களுக்கு மீட்டு தர வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க திருப்பத்தூர் ஒன்றிய அமைப்பாளர் ராஜாபெருமாள் கொடுத்துள்ள மனுவில், வாணியம்பாடி தாலுகா பூங்குளம் கிராமத்தில் சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திருமணம், பொதுக்கூட்டம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்கள் நடத்த வெகு தூரத்தில் உள்ள திருமண மண்டபங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும். அதற்கான இடமும் ஊர் அருகிலேயே உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய கூடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நரிக்குறவர் நலவாரியம் மூலம் 8 நரிக்குறவர்களுக்கு தொழில் தொடங்க ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் ராமன் வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்