அரசு பள்ளிக்கூடத்தில் பொறுப்பு ஏற்க வந்த தலைமை ஆசிரியர் விரட்டியடிப்பு

தொடர் புகாரால் தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார். அரசு பள்ளிக்கூடத்தில் பொறுப்பு ஏற்க வந்த அவரை, கிராம மக்கள் விரட்டியடித்தனர்.;

Update: 2017-12-11 22:52 GMT
விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள நடியப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் அண்ணாமலை. இவர் மீது பல்வேறு புகார்களை மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் கூறினர். மேலும் இது தொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு ஆகிய அலுவலகத்துக்கும் புகார்கள் சென்றன.
இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர் கடந்த 12.10.2017 அன்று நடியப்பட்டு அரசு பள்ளிக்கூடத்துக்கு திடீரென வந்தார். பின்னர் தலைமை ஆசிரியர் அண்ணாமலை மீதான புகார் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலர், தனது விசாரணை அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்தார். இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அண்ணாமலையை இடமாற்றம் செய்து, முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார். அந்த ஆணையில் கூறியிருப்பதாவது:-

நடியப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாமலை மீது கிராம மக்களிடம் இருந்து வந்த தொடர் புகாரின் காரணமாகவும், நடியப்பட்டு பள்ளியில் சுமூக சூழ்நிலை ஏற்படுத்துவதற்காகவும் சாத்துக்கூடல் அரசு உயர்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பொறுப்பினை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை ஏற்று மாற்றுப்பணியில் பணி செய்திட ஆணையிடப்படுகிறது.
இவ்வாறு அந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆணையை பெற்றுக்கொண்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை நேற்று தனது பொறுப்பினை ஏற்றுக்கொள்வதற்காக சாத்துக்கூடல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு காரில் புறப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் சாத்துக்கூடல் கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சாத்துக்கூடல் கிராமத்தின் எல்லையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர்.

அந்த சமயத்தில் அங்கு வந்த தலைமை ஆசிரியரின் காரை மறித்து முற்றுகையிட்டனர். அப்போது கிராம மக்கள், பல்வேறு புகாரில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர் எங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு பணியாற்ற வரக்கூடாது, திரும்பி செல்லுங்கள் என்றனர்.

உடனே காரில் இருந்து இறங்கிய தலைமை ஆசிரியர் அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்ட ஆணையை காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், அந்த ஆணையை நீங்களே வைத்துகொண்டு வேறு ஏதேனும் பள்ளிக்கூடத்துக்கு சென்று பணியாற்றுங்கள். எங்களது கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு நல்ல ஆசிரியர்தான் தேவை. புகாரில் சிக்கியவர் தேவையில்லை என்று கூறியபடி காரை தாக்கி விரட்டினர்.

இதையடுத்து அந்த தலைமை ஆசிரியர், அங்கிருந்து காரில் திரும்பி சென்று விட்டார். தொடர்ந்து கிராம மக்கள், தலைமை ஆசிரியருக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது அவர்கள், அந்த தலைமை ஆசிரியரை எங்கள் பள்ளிக்கூடத்தில் பணியமர்த்தினால் மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்.

பள்ளியை இழுத்து மூடி பூட்டுபோட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இடமாற்றம் செய்யப்பட்ட அரசு பள்ளிக்கூடத்தில் பொறுப்பு ஏற்க வந்த தலைமை ஆசிரியர் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்