திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் எச்.ராஜா வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

Update: 2017-12-11 23:30 GMT

புதுச்சேரி,

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு புதுவை மாநிலத்துக்கு பல்வேறு திட்டங்களில் முழு நிதியையும் தருகிறது. வீடுகட்டும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம். அதை மாநில அரசின் திட்டம்போன்று புதுவையில் செயல்படுத்துகிறார்கள். முதல்–அமைச்சர் நாராயணசாமி தனது நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசுக்கு எதிராக பேசுவது மக்கள் நலனை பாதிக்கும்.

புதுவையில் கவர்னர் கிரண்பெடியினால் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பல நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவரை போகும் இடங்களில் எல்லாம் முதல்–அமைச்சர் நாராயணசாமி காங்கிரசாரை ஏவிவிட்டு கலாட்டா செய்வது நாகரீகமானதல்ல. அதேபோல் பாரதீய ஜனதா களத்தில் இறங்கினால் நாராயணசாமியால் தாக்குப்பிடிக்க முடியாது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் வீச தொடங்கிய தினத்தன்றே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் களத்தில் இருந்து நிவாரண பணிகளை செய்தார். அதேபோல் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் சேவை செய்தனர். அதற்கு அடுத்த நாள் ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் அங்கு தங்கியிருந்து மீட்பு பணியில் ஈடுபட்டார். அதன் காரணமாக இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.

மீனவர்களைப்போல் விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் உதவிட மத்திய அரசு தயாராக உள்ளது. புயல் தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அந்த எச்சரிக்கையை மாநில அரசு சரியாக எடுத்து செல்லவில்லை. மீனவர்கள் கடலோர காவல்படையை தெய்வமாக நினைக்கிறார்கள். ஆனால் பாதிரி படைகள், திருமுருகன் காந்தி போன்றவர்கள் பிரதமர், முதல்–அமைச்சரின் படத்தை போட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள். பாதிரியார்களின் கட்டுப்பாட்டில் மீனவர்கள் இனி இருக்கமாட்டார்கள்.

கன்னியாகுமரியில் பாதிரியார்கள் நடத்துவது மீனவர்களுக்கான போராட்டம் அல்ல. மதரீதியிலான போர். மெரினாவை விட கடுமையான போராட்டத்தை நடத்துவோம் என்று தேசவிரோத சக்திகள் பேசி வருகிறார்கள். அத்தகைய தீய சக்திகளை மீனவர்கள் அடையாளம் கண்டு ஒதுக்கவேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட ஒருவரையாவது பாதிரியார்கள் காப்பாற்றி இருப்பார்களா?

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக ஜாதி மோதலை தூண்டிவருகிறார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். எல்லா மதத்தின் நம்பிக்கைகளையும் பாரதீய ஜனதா மதிக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தல் முறையாக நடக்கவேண்டும். ஏற்கனவே நடந்த பிரச்சினைகள் பல தேர்தல் கமி‌ஷன் முன்பு உள்ளது.

தமிழக கவர்னர் சட்டப்படி, தனக்குரிய அதிகாரத்தின்படிதான் ஆய்வுகளை நடத்துகிறார். தைரியம் இருப்பவர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தட்டும். தி.மு.க.வுக்கு முதுகெலும்பு இருந்தால் முன்பு போல இந்தி எதிர்ப்பு போராட்டத்தை இப்போது நடத்தட்டும். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் மாநிலம் தழுவிய மக்கள் நலத்திட்ட விழிப்புணர்வு பயணத்தையும் எச்.ராஜா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், துணைத்தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க.விக்ரமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்