பா.ஜனதாவினர் போராட்டத்தில் கல்வீச்சு– 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு சப்–இன்ஸ்பெக்டர் காயம்; தடியடி

குமட்டாவில் இந்து அமைப்பு பிரமுகரை கொன்ற கொலையாளிகளை கைது செய்ய கோரி நேற்று பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

Update: 2017-12-11 23:30 GMT

மங்களூரு,

குமட்டாவில் இந்து அமைப்பு பிரமுகரை கொன்ற கொலையாளிகளை கைது செய்ய கோரி நேற்று பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் சப்–இன்ஸ்பெக்டர் காயமடைந்தார். அத்துடன் ஐ.ஜி.யின் கார் உள்பட 2 போலீஸ் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இதைதொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

கார்வார் மாவட்டம் ஒன்னாவர் தாலுகா குமட்டா டவுன் பகுதியை சேர்ந்தவர் பரேஸ் மேஸ்கா (வயது 40). இந்து அமைப்பின் பிரமுகர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரத்த காயங்களுடன் பரேஸ் மேஸ்கா மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை குமட்டா போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒன்னாவர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பரேஸ் மேஸ்காவின் இறப்பு, மர்மசாவு என குமட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே பரேஸ் மேஸ்கா கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், கொலையாளிகளை உடனே கைது செய்ய கோரியும் பா.ஜனதா சார்பில் குமட்டா பகுதியில் நேற்று முழுஅடைப்புக்கு அழைப்புவிடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை குமட்டா பகுதியில் ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் குறைந்த அளவிலேயே அரசு பஸ்கள், ஆட்டோக்கள் இயங்கின. இந்த முழுஅடைப்பை முன்னிட்டு பா.ஜனதாவினர் குமட்டா டவுனில் மங்களூரு– மும்பை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் டயர்களை போட்டு தீவைத்து எரித்தனர். மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த குமட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் சிலர் நடுரோட்டில் டயர்களுக்கு மீண்டும் தீவைத்ததுடன், போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் குமட்டா சப்–இன்ஸ்பெக்டர் சம்பத் குமார் காயமடைந்தார். தொடர்ந்து கல்வீச்சு சம்பவமும் நடந்தது. அத்துடன் போலீஸ் ஜீப்புக்கு சிலர் தீவைத்தனர்.

இதைதொடர்ந்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஹேமந்த் நிம்பல்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது போராட்டக்காரர்களில் சிலர், ஐ.ஜி. வந்த காருக்கும் தீவைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 போலீஸ் வாகனங்களில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வாகனங்களும் எரிந்து நாசமானது.

அந்தப் பகுதியில் தொடர்ந்து கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்தன. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதன் காரணமாக அந்தப் பகுதி போர்க்களம் போல் காணப்பட்டது. போலீஸ் தடியடியில் சிலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 25 பேரை குமட்டா போலீசார் கைது செய்துள்ளனர்.

இருப்பினும் குமட்டா உள்பட கார்வார் மாவட்டம் முழுவதும் பரபரப்பும், பதற்றமும் நீடிக்கிறது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்