ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-11 23:00 GMT
திண்டுக்கல்,

தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்க வடமதுரை ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார்.

இதில், வடமதுரை ஒன்றியத்தை சேர்ந்த சுமார் 500 விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சார்பில் கலெக்டர் டி.ஜி.வினயிடம் ஒரு கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

வடமதுரை ஒன்றியம் சித்துவார்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் குரும்பப்பட்டி, புதுப்பட்டி, கொம்பேறிபட்டி, பாகாநத்தம் உள்பட 20 கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் போதிய மழை இல்லை. இதனால் அவர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகளுக்கு சென்று குடும்பத்தை நடத்தி வந்தனர்.

ஆனால், கடந்த 6 மாதமாக ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்காரணமாக வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருகிறோம். எனவே ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன்பேரில் விவசாய தொழிலாளர் கள் கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்