நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2017-12-11 23:00 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் சங்கரலிங்கம், நெல்லை உதவி கலெக்டர் மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாளையங்கோட்டை நேசநயினார் தெருவில் உள்ள உச்சினிமாகாளி அம்மன் கோவில் எதிர்புறம் எங்கள் பகுதிக்கு வரக்கூடிய பாதையையும், கழிவுநீர் ஓடையையும் ஆக்கிரமித்து ஒருவர் கட்டிடம் கட்டி உள்ளார் இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கூறி ஆதித்தமிழர் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க ஊர்வலமாக வந்தனர். இதில் ரமேஷ் என்பவர் அரைநிர்வாணமாக வந்தார். இவர்களை கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்ற போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி தாலுகா உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் தலைவர் முருகேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் கடலில் மாயமான மீனவர்களை மீட்டு தரும் வரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

பாலாமடையில் உள்ள ரேஷன்கடையில் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மேலக்கடையநல்லூர் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி சம்பவம் நடந்து வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த திருட்டை தடுக்க ஊரில் உள்ள இளைஞர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் 2 பேர் சந்தேகப்படும் படியாக வந்து தெருவிளக்கை அணைத்தனர். உடனே ஊர்மக்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் துணை தாசில்தாருக்கு ஆதரவாக வந்து உள்ளோம் என்று கூறினர். இதைத்தொடர்ந்து துணை தாசில்தார் மோட்டார் சைக்கிளில் சில நபர்களுடன் வந்தார். அவரிடம் கேட்டதற்கு நான் தான் அவர்களை அழைத்து வந்தேன் என்று கூறினார். அவரிடம் நீங்கள் ஏன் போலீசை அழைத்து வராமல் இவர்களை அழைத்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் எங்களை அடிக்க முயன்றார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம் போலீசார் அவர்களை அழைத்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் போலீசார் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விட்டனர். இந்த வழக்கை திரும்ப பெறவேண்டும். அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர். 

மேலும் செய்திகள்