திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க கத்தியுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க கத்தியுடன் வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-11 23:00 GMT
திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் திருச்சி காட்டூர் பிலோமினாள் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற நர்சு தேற்றிரவுமேரி (வயது 68) என்பவர் வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், எனக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போது நான் எனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறேன். இந்த வீட்டில் இரவு நேரங்களில் சிலர் வந்து வீட்டை இடிக்கின்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர், என்று கூறியிருந்தார்.

முன்னதாக மனு கொடுக்க வந்தபோது கூட்டம் நடந்த அறை முன்பு பாதுகாப்பிற்கு இருந்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு பையை வாங்கி சோதனை செய்தனர். அதில் ஒரு கத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர். அப்போது, தற்காப்பிற்காக கத்தியை எடுத்து வந்தேன், என்று அவர் கூறினார். அதற்கு போலீசார் கத்தியுடன் சென்று மனு கொடுக்க கூடாது. எனவே மனுவை கொடுத்து விட்டு வந்து கத்தியை வாங்கி செல்லுங்கள் என்று கூறி, கத்தியை தங்களிடம் வைத்துக்கொண்டனர். பின்னர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு வந்த அந்த மூதாட்டியிடம் போலீசார் கத்தியை கொடுத்தனர்.

இது குறித்து தேற்றிரவுமேரியிடம் கேட்டபோது எனது சொத்தையும், எனது தந்தையின் வீட்டையும் அபகரிக்க சிலர் முயற்சி செய்கின்றனர். பல நேரங்களில் நான் வசித்து வரும் வீட்டை இரவு நேரங்களில் சிலர் கம்பி மூலம் இடிக்கின்றனர். கொலை மிரட்டலும் விடுக்கின்றனர். எனவே எனது தற்காப்பிற்காக கடந்த 3 வருடமாக எங்கு சென்றாலும் கையில் கத்தியுடன் சென்று வருகிறேன், என்று கூறினார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்து வட்டி கொடுமையால் குடும்பமே தீக்குளித்து பலியானது. அந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திங்கட்கிழமை தோறும் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது. அதே போன்று நேற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அவர்கள் மனு கொடுக்க வந்தவர்களின் பை உள்ளிட்ட உடைமைகளை பலத்த சோதனைக்கு பிறகே மனு கொடுக்க உள்ளே அனுமதித்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாசலில் இருந்த போலீசாரின் பலத்த பாதுகாப்பையும் மீறி இவர் பையில் கத்தியை எடுத்து வந்ததால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்