சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம்

சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2017-12-11 22:30 GMT
அழகர்கோவில்,

அழகர்மலை உச்சியில் உள்ளது முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான பிரசித்தி பெற்ற சோலைமலை முருகன் கோவில்.

இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவார விழா கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து 2-வது, 3-வது சோமவார விழாக்கள் நடந்தன. நேற்று (திங்கட்கிழமை) 4-வது சோமவார நிறைவுவிழா நடந்தது.

இதில் அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் தானியங்கள் பரப்பப்பட்டு, அதன் மீது 1008 வெண்சங்குகள் ஓம் வடிவத்தில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டன. அதன்மீது ரோஜா உள்பட வண்ண மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுக்கு பின்பு உலக நன்மை வேண்டி சங்காபிஷேகம் நடந்தது.

சங்காபிஷேகம்

தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு வேள்வி பூஜை நடத்தப்பட்டன. அப்போது சங்கு வடிவத்தில் பிரதானமாக வைக்கப்பட்டிருந்த பூரண கும்பத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டன. பின்பு 1008 சங்குகளில் இருந்த புனிதநீர் சாமிக்கு ஊற்றப்பட்டு சங்காபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக மூலவர், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதிகளில் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்