டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு கட்டண சலுகை கேட்டு தவறுதலாக விண்ணப்பித்தவர்களுக்கு சலுகை

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தவறுதலாக கட்டண சலுகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-11 22:15 GMT
மதுரை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ. பதவிகளுக்கு நாளை (புதன்கிழமைக்குள்) விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வுக்கட்டணத்தை வருகிற 15-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் பணிநிபந்தனைச்சட்டத்தின் படி, பழங்குடியினர், பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர்(அருந்ததியர்), ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விலக்களிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினரை பொறுத்தமட்டில், 2 முறை மட்டும் தேர்வுக்கட்டணம் செலுத்தத்தேவையில்லை. பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லீம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருந்தால் 3 முறை தேர்வுக்கட்டணம் செலுத்தத்தேவையில்லை. இந்த நிலையில், ஒரு சிலர் விதிகளுக்கு புறம்பாக தேர்வுக்கட்டண சலுகையை பெற்றுள்ளனர்.

எனவே, விதிப்படி தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்று சலுகை காலத்தை பயன்படுத்திக்கொண்டவர்கள் தற்போது குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டாயம் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். அவ்வாறு தேர்வுக்கட்டணம் செலுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் கட்டணம் செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தவறுதலாக தேர்வுக்கட்டண சலுகைக்காக விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டும் திரும்ப செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த வாய்ப்பு ஒரேயொரு முறை மட்டும் வழங்கப்படுகிறது.

அதன்படி, தேர்வுக்கட்டண சலுகை பெற்று தற்போது தேர்வுக்கட்டணம் செலுத்த விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்தாமல் இருந்தாலோ, தொழில்நுட்ப காரணத்தால் கட்டணம் செலுத்த முடியாமல் போனாலோ விண்ணப்பம் நிராகரிப்படும்.

எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய கட்டணம் மற்றும் விண்ணப்பம் தேர்வாணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை இணையதளத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த சலுகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வு மற்றும் இனிமேல் மேற்கொள்ளப்படும் அறிவிப்புகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்