அரசியலில் ஈடுபட முடிவா? நடிகர் சுதீப் பதில்
அரசியலில் ஈடுபட முடிவா? என்ற கேள்விக்கு நடிகர் சுதீப் பதில் அளித்து உள்ளார்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவருடைய காவேரி இல்லத்தில் பிரபல கன்னட நடிகர் சுதீப் நேற்று சந்தித்து பேசினார். அப்போது நடிகர் விஷ்ணுவர்தன் நினைவு மண்டபத்தை பெங்களூருவிலோ அல்லது மைசூருவிலோ அமைத்து கொள்ளுங்கள். அதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவர் அடக்கம் செய்யப்பட்ட சமாதியை அப்படியே புண்ணிய பூமியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு சுதீப் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்புக்கு பிறகு சுதீப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நடிகர் விஷ்ணுவர்தனின் உடல் பெங்களூருவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தை இடமாற்றம் செய்யக்கூடாது. அதை புண்ணிய பூமியாக பாதுகாக்க வேண்டும் என்று நான் முதல்–மந்திரியிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் சாதகமான பதிலை கூறினார். விஷ்ணுவர்தன் இறந்து 8 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்படவில்லை. டிசம்பர் மாதத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு நினைவு மண்டபத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் அந்த பணியை திரைத்துறையிடம் ஒப்படைத்துவிடுங்கள். நாங்கள் அந்த மண்டபத்தை அமைத்து கொள்கிறோம் என்று முதல்–மந்திரியிடம் எடுத்துக் கூறினேன். பாரதி விஷ்ணுவர்தன் விருப்பப்படி மைசூருவிலேயே நினைவு மண்டபம் அமையட்டும்.
ஆனால் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்பது கன்னடர்கள் மற்றும் அவருடைய ரசிகர்களின் கோரிக்கை ஆகும். இதில் பிரச்சினை இல்லை. இந்த மாத இறுதிக்குள் மாநில அரசு ஒரு தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுதீப் கூறினார்.
அப்போது நடிகர் சுதீப்பிடம் நிருபர்கள் அரசியல் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பினர். அதாவது நீங்கள் அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளீர்களா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் இருக்கைகளை உயர்த்தி கும்பிட்டுவிட்டு புன்னகையை மட்டுமே பதிலாக கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்று சென்றார்.