ஒகி புயலில் சிக்கி இறந்த குளச்சல் மீனவர்கள் குடும்பத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ஆறுதல்

ஒகி புயலில் சிக்கி இறந்த குளச்சல் மீனவர்கள் குடும்பத்திற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Update: 2017-12-11 23:15 GMT
குளச்சல்,

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நேற்று காலையில் அவர் குளச்சல் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

மேலும் பலியான மீனவர்கள் ஜாண் டேவிட்சன், ஜஸ்டின் பாபு ஆகியோரின் வீட்டுக்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கிருந்த மீனவர்கள், “மீட்பு பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டம் ஏற்கனவே பல இழப்புகளை சந்தித்து வருகிறது. எனவே மாயமான மீனவர்களை கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம், கப்பல் தள வசதிகள் இங்கு இல்லை. அதனை ஏற்படுத்த வேண்டும்.

கேரளாவில் நிவாரணம் வழங்குவது போல் குமரி மாவட்டத்துக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சுனாமி தாக்குதலை விட மிகப்பெரிய பேரழிவை புயல் தாக்குதலில் சந்தித்துள்ளோம். எனவே நாங்கள் இழந்த பொருட்களுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கோரிக்கைகள் வைத்தனர்.

அதற்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது,  “உங்களது பிரச்சினைகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிவாரணங்கள் வழங்குவது தொடர்பாக முதல்–அமைச்சரிடம் பேசி உள்ளோம். மீனவர்களை மீட்பது  தொடர்பாக ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பேசி கூடுதலாக ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட கடற்கரை கிராமங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்