ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது
திருவள்ளூரில் ஆட்டோ டிரைவரிடம் பணம் பறிப்பு; வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த சேலைக்கண்டிகையை சேர்ந்தவர் பாபு (வயது 50). ஆட்டோ டிரைவர். நேற்று முன்தினம் பாபு தனது ஆட்டோவில் ஆட்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு சென்றார். அங்கு அவர்களை இறக்கிவிட்டு அவர் மீண்டும் திருவள்ளூர் தேரடி நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் அந்த ஆட்டோ வந்தபோது ஆட்டோவை வழிமறித்த திருவள்ளூர் காந்திபுரத்தை சேர்ந்த ராஜேஷ் (23) என்பவர் தான் வைத்திருந்த கத்தியை காட்டி அவரை தகாத வார்த்தையால் பேசி அவர் பாக்கெட்டில் இருந்து ரூ.1,500–ஐ பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார்.
இது குறித்து பாபு திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.