மீனவர்களை மீட்கக்கோரி கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் போராட்டம் 29 பேர் கைது

‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டு தரக்கோரி கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் இயக்கத்தை சேர்ந்த 29 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2017-12-10 23:14 GMT
கடலூர் முதுநகர்,

கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டி போட்ட ‘ஒகி’ புயலில் சிக்கி மீனவர்கள் பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமான மீனவர்களை உடனடியாக மீட்டு தர வேண்டும், புயலில் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மீனவர்களை பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்க வேண்டும், தமிழக மீனவர்களை இந்தியனாக பார்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10-ந்தேதி(அதாவது நேற்று) கடலூர் துறைமுகம் ரெயில் நிலைய தண்டவாளத்தில் படுத்து ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழர் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே முன்னெச்சரிக்கையாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் தலைமையில் முதுநகர் போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமையில், 25-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கடலூர் துறைமுகம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். அவர்களை அங்கு நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், பேரிகார்டுகள் மூலம் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் அங்கேயே கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் எச்சரித்தும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்