சித்தராமையாவை சிறையில் அடைப்போம் மாற்றத்திற்கான பயண கூட்டத்தில் எடியூரப்பா பேச்சு

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் சித்தராமையாவை சிறையில் அடைப்போம் என்று மாற்றத்திற்கான பயண கூட்டத்தில் எடியூரப்பா கூறினார்.

Update: 2017-12-10 23:30 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2018) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாற்றத்திற்கான பயணத்தை கடந்த மாதம்(நவம்பர்) 2–ந் தேதி கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தொடங்கினார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பல்வேறு மாவட்டங்களில் அவர் பயணம் செய்து கட்சி பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற மாற்றத்திற்கான பயண பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு பேசியதாவது:–

நான் சிறைக்கு சென்று வந்ததாக சித்தராமையா அடிக்கடி சொல்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உள்பட அந்த கட்சியின் தலைவர்கள் பலர் ஜாமீனில் வெளியே உள்ளனர். அதை சித்தராமையா மறந்துவிட்டார். கொலைகாரர்களை அவர் பாதுகாக்கிறார். ஊழல் தடுப்பு படை, சி.ஐ.டி. ஆகிய விசாரணை அமைப்புகளை இந்த அரசு தவறாக பயன்படுத்தி, மந்திரிகள் மீதான புகார்களில் நற்சான்றிதழ்களை பெறுகிறது

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால் கிடப்பில் போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் தூசி தட்டி எடுக்கப்படும். சித்தராமையா உள்பட புகார்களுக்கு உள்ளானவர்களை சிறையில் அடைப்போம். மாநிலத்தில் இந்துமத அமைப்புகளின் தொண்டர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். சட்டம்–ஒழுங்கு முழுவதுமாக சீர்குலைந்துவிட்டது.

சித்தராமையா அரசு செத்துவிட்டதாக மக்கள் கருதுகிறார்கள். கர்நாடகத்தில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, திருட்டு போன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. இது வளர்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கர்நாடகத்திற்கு வர தயங்குகிறார்கள். மாநிலத்தில் மணல் கொள்ளை ஜோராக நடக்கிறது.

இதற்கு கடிவாளம் போடுவதில் சித்தராமையா தோல்வி அடைந்துவிட்டார். மந்திரிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மணல் பற்றாக்குறையால் மலேசியாவில் இருந்து அதிக விலை கொடுத்து மணலை இறக்குமதி செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளார். தன்னை கேட்க யாரும் இல்லை சித்தராமையா நினைக்கிறார்.

இமாச்சல பிரதேசம், குஜராத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும். அதன் பிறகு கர்நாடகத்தில் நடைபெறும் தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சிக்கு வரும். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம். தன்னை கண்டால் பிரதமர் மோடிக்கு பயம் என்று சித்தராமையா சொல்கிறார். இது முட்டாள்தனமான பேச்சு. மோடிக்கு முன்பு சித்தராமையா ஒன்றும் இல்லை.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மேலும் செய்திகள்