தீப்பெட்டி-கட்டுமான தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி வேண்டும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

கோவில்பட்டி பகுதியிலுள்ள, தீப்பெட்டி-கட்டுமான தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி செய்து தர வேண்டும், என அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.;

Update: 2017-12-10 22:45 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி ஐ.என்.டி.யு.சி. அலுவலகத்தில் நேற்று காலையில், அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் காசிராஜன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் தமிழரசன், ஐ.என்.டி.யு.சி. தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிலாளர் முன்னேற்ற கழக தலைவர் பரமசிவம், ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைவர் பொன்ராஜ், டி.யு.சி.சி. மாவட்ட செயலாளர் பொன் இருளாண்டி மற்றும் பெரியசாமி, அய்யாபிள்ளை, ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தீப்பெட்டி தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். அவர்களுக்கு இ.எஸ்.ஐ. வசதி செய்து கொடுக்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி தொழிலாளர் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த தொழிலாளர்களின் ஓய்வூதியம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 10 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்க வேண்டும். டாஸ்மாக் மதுபான கடைகளில் போலி மது பானம் விற்பதை தடை செய்ய வேண்டும். கேரள அரசு 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை தடை செய்து இருப்பது போல், தமிழ்நாட்டில் நடைமுறை படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்