தலையை சுவரில் மோதி மனைவியை கொலை செய்த தொழிலாளி கைது

காங்கேயம் அருகே முட்டைகளை குழந்தை உடைத்து விட்டதால் ஆத்திரம் அடைந்த தொழிலாளி மனைவியின் தலையை சுவரில் மோதி கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-10 22:15 GMT
காங்கேயம்,

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சிக்கந்தர்மந்தர் (வயது 25). இவரது மனைவி ரூனாதேவி(21). இந்த தம்பதிகளுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. சிக்கந்தர்மந்தர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள காடையூரில் வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு அந்த பகுதியில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு சிக்கந்தர்மந்தர் கடையில் இருந்து முட்டைகளை வீட்டிற்கு வாங்கி வந்தார். பின்னர் அந்த முட்டைகளை தனது மனைவி ரூனாதேவியிடம் கொடுத்து ஆம்லெட் போட சொன்னார். அந்த முட்டைகளை ரூனாதேவி சமையல் அறையில் ஒரு பகுதியில் வைத்து விட்டு உணவு சமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது சமையல் அறைக்குள் வந்த இவர்களுடைய குழந்தை முட்டைகளை பார்த்ததும் அதை எடுக்க முயன்றுள்ளது. அப்போது அந்த முட்டைகள் அனைத்தும் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த சிக்கந்தர்மந்தர் தனது மனைவியிடம் “ உனது கவனக்குறைவால்தான் முட்டைகளை குழந்தை உடைத்துவிட்டது” என்று கூறி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு முற்றவே கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சிக்கந்தர்மந்தர், ரூனாதேவியை தாக்கியதோடு அவரது தலையை பிடித்து இழுத்து சுவரில் மோதியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ரூனாதேவி மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிக்கந்தர்மந்தர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன் உடனே ரூனாதேவியை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள், ரூனாதேவியை பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி வீட்டின் உரிமையாளர் மணி காங்கேயம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனே காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று ரூனாதேவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிக்கந்தர்மந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முட்டைக்காக தகராறு ஏற்பட்டு மனைவியை கணவன் சுவரில் மோதி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்