திருப்பூரில், தண்டவாள பராமரிப்பு பணிக்காக 2-வது ரெயில்வே கேட் 2 நாட்கள் மூடப்படுகிறது

திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 2-வது ரெயில்வே கேட் தண்டவாள பராமரிப்பு பணிக்காக வருகிற 13 மற்றும் 14-ந்தேதி என 2 நாட்கள் மூடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

Update: 2017-12-10 22:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் ரெயில் தண்டவாளத்தை கடக்கும் வகையில் முதல் ரெயில்வே கேட், 2-வது ரெயில்வே கேட் உள்ளன. தண்டவாள விரிவாக்க பணிக்காக முதல் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஓராண்டாகி விட்டது. 2-வது ரெயில்வே கேட் வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன.

இதன் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. முதல் ரெயில்வே கேட்டுக்கும், 2-வது ரெயில்வே கேட்டுக்கும் இடையே உள்ள ஒற்றைக்கண் பாலம் வழியாக இருசக்கர மற்றும் சிறிய நான்கு வாகனங்கள் சென்று வருகிறது.

இந்த நிலையில் தண்டவாள பராமரிப்பு காரணமாக 2-வது ரெயில்வே கேட் வழியாக வருகிற 13-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய 2 நாட்கள் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. 2 நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது என்று ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை 2-வது ரெயில்வே கேட்டில் வைக்கப்பட்டுள்ளது.

2 நாட்கள் 2-வது ரெயில்வே கேட் மூடப்படும் போது ஊத்துக்குளி ரோட்டில் இருந்து கொங்குமெயின் ரோடு பகுதிக்கு ஒற்றைக்கண் பாலம், சுரங்கப்பாலம் மற்றும் ரெயில்வே பாலம் வழியாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்