‘‘வாயை மூடுங்கள் அல்லது உண்மைகளை வெளியிடுவேன்’’

‘‘வாயை மூடுங்கள் அல்லது உண்மைகளை வெளியிடுவேன்’’ என உத்தவ் தாக்கரேக்கு, நாராயண் ரானே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2017-12-11 00:00 GMT

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியில் இருந்தபோது, முதல்– மந்திரியாக இருந்தவர் நாராயண் ரானே. உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிவசேனாவில் இருந்து விலகிய நாராயண் ரானே காங்கிரசில் இணைந்தார். இந்தநிலையில் சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, மராட்டிய சுவாபிமான் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். பின்னர் அவர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தார்.

பா.ஜனதா அவரை சட்டமன்ற மேல்–சபை உறுப்பினராக்கி மந்திரி பதவி கொடுக்கும் என கூறப்பட்டது. ஆனால் மேல்–சபை தேர்தலில் நாராயண் ரானேக்கு வாய்ப்பு கொடுக்க பா.ஜனதாவிடம், அதன் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து சட்டமன்ற மேல்–சபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் பிரசாத் லாட் நிறுத்தப்பட்டார்.

இந்தநிலையில் நாராயண் ரானே சிவசேனாவில் இருந்தபோது, மறைந்த தலைவர் பால்தாக்கரேக்கு எல்லையில்லா தொல்லை கொடுத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு பதில் அளித்து நாராயண் ரானே சாங்கிலியில் நேற்று முன்தினம் கூறியதாவது:–

உத்தவ் தாக்கரேயும், அவரது குடும்பத்தினரும் பால்தாக்கரேயை எப்படியெல்லாம் தொல்லை செய்தார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். அவர்(உத்தவ்தாக்கரே) வாயை மூடவில்லை என்றால் நான் அவர்களை பற்றிய உண்மைகளை வெளியே சொல்ல தயங்கமாட்டேன்.

பால்தாக்கரே உயிரோடு இருந்தபோது, நான் அவருக்கு எந்த வகையிலும் தொல்லை கொடுத்தது கிடையாது. ஆனால் மாதோஸ்ரீ இல்லத்தில் என்னவெல்லாம் நடந்தது என்பதை எனது கண்களால் பார்த்தவன் நான்.

நடந்த எல்லாவற்றையும் நான் நிச்சயமாக சொல்லுவேன். அவர்களின் குற்றச்சாட்டுகள் தவறானது. இதை நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்