அந்தேரியில் மழலையர் பள்ளிக்குள் சிறுத்தைப்புலி புகுந்ததால் பரபரப்பு

அந்தேரியில் மழலையர் பள்ளிக்குள் சிறுத்தைப்புலி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-10 23:30 GMT

மும்பை,

மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்கா தானே வரையில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இங்குள்ள சிறுத்தைப்புலிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சிறுத்தைப்புலி தாக்குதலுக்கு மனித உயிர்பலிகளும் ஏற்பட்டு உள்ளன.

சர்வசாதாரணமாக சிறுத்தைப்புலிகள் தெருவில் புகுந்து உலா வரும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. இதனால் சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியை ஒட்டிய ஆரேகாலனி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்புவாசிகள் உயிர் பயத்துடனேயே வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனாலும் சிறுத்தைப்புலிகள் குடியிருப்பு பகுதிகளில் புகுவதை தடுக்க சரியான நடவடிக்கைகள் எதுவும் இன்னமும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், அந்தேரி கிழக்கு ஷேரே பஞ்சாய் பகுதியில் உள்ள ஒரு மழலையர் பள்ளிக்குள் சிறுத்தைப்புலி ஒன்று புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குழந்தைகள் மற்றும் ஆசிரியைகள் பள்ளிக்கு வரவில்லை. இதன் காரணமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.

சிறுத்தைப்புலி பள்ளியின் வகுப்பறையில் உலாவும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சி அங்குள்ள அனைவரையும் பீதியில் உறைய வைத்தது.

இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்