விராட் கோலியின் தோழிக்கு வேறு நண்பர்கள் இல்லை..

கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் அந்தரங்க தோழியான பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மா, தான் தனது உணர்வுகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்வதில்லை என்கிறார்.;

Update: 2017-12-10 02:52 GMT
கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் அந்தரங்க தோழியான பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மா, தான் தனது உணர்வுகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்வதில்லை என்கிறார்.

‘என்.எச்.’ படத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பாளர் என்ற தகுதிக்கும் உரியவர் ஆகியிருக்கிற அனுஷ்கா, நடிகை, தயாரிப்பாளர் என்ற இரு பொறுப்புகளையும் சமநிலையில் பராமரிப்பதாகக் கூறுகிறார்.

சினிமா, அத்தொழில் பற்றிய தனது புரிதல் மாறிவிட்டிருப்பதாகவும், அதற்கு நடிகை, தயாரிப்பாளர் என்ற தனது இரு நிலைகள்தான் காரணம் என்றும் அனுஷ்கா விளக்குகிறார்.

‘‘தயாரிப்பாளர் என்ற முறையில் திரைப்பட உலகுக்கு மிக நெருக்கமாக இருப்பதால், இங்கே உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு நடிகையாக சினிமாவில் நமது ஈடுபாடு ஒரு வரையறைக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஆனால் தயாரிப்பாளராக, ஒரு கதை உருவாகும் தருணம் முதல், அது வெளியாகும் கணம் வரை எனது ஈடுபாடு இருக்கிறது. ஒரு தயாரிப்பாளராக எனக்கு மிக அதிகமான பொறுப்புகள் இருக்கின்றன’’ என்று அனுஷ்கா சொல்கிறார்.

ஆனால் இந்த இரு அவதாரங்களிலும் தொடர்ந்து நீடிப்பது, தனது நேரத்தை நிறைய விழுங்கிவிடுவதாகவும் இவர் கருதுகிறார்.

‘‘இப்போதெல்லாம் எனக்கு ஓய்வுக்கு நேரமில்லை. கடந்த மூன்றாண்டுகளாக நான் அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் கலந்துகொள்கிறேன், திரைப்படங்களை வெளியிடுகிறேன். கடந்த இரண்டாண்டுகளாக நான் பல்வேறு விதங்களில் சாதிக்க முயற்சிக்கிறேன். அதற்கெல்லாம் கடும் உழைப்பும், நிறைய நேரமும் தேவைப்படுகிறது. எனவே எனது ஓய்வுக்கு கொஞ்ச நேரம் கிடைத்தாலும், என்னுடைய குடும்பத்தினருடன் கழிக்க விரும்புகிறேன். அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்று மனம் திறக்கிறார்.

மற்றவர்களுடன் அனுஷ்கா நெருங்கிப்பழகுவதில்லை. அதுபற்றி, ‘‘மற்றவர்களுடன் கலந்துறவாடுவதற்கு எனக்கு நேரமில்லை. அப்படி நேரம் கிடைத்தால் ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்ளவும், அடுத்த வேலைக்கு தயார்ப்படுத்திக்கொள்ளவுமே எனக்கு விருப்பம். ஒரு பார்ட்டிக்கு நான் சென்றுவிட்டு வந்தால், நான் உணர்வுரீதியாகவும், அறிவுரீதியாகவும் மிகவும் சோர்ந்து போனவளாக உணர்கிறேன். அதற்குப் பதிலாக, என்னை நல்லவிதமாக உணரவைக்கும் புத்தகம் படிப்பது, டி.வி. பார்ப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என்று எண்ணுகிறேன்’’ என்கிறார்.

இந்தி திரை உலகில் உங்கள் நண்பர்கள் யார்? என்று கேட்டால்,

‘‘இந்தி திரையுலகில் எனக்கு அதிக நண்பர்கள் கிடையாது. நானும் நட்பாகப் பழகவில்லை என்பதும் உண்மைதான். திரையுலகில் நான் எல்லோரையும் மதிக்கிறேன், மற்றவர்களுடன் இருப்பது நன்றாக இருக்கும்தான். ஆனால் நான் உணர்வுரீதியாக ஒரு சுதந்திரமான நபர். எனது உணர்வுகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்கிற ஆள் நான் கிடையாது. அதேநேரம், பாலிவுட்டை தாண்டி எனக்குப் பல நண்பர்கள் இருக்கவே செய்கிறார்கள்’’

அவர்களில் ஒருவர்தான் விராட் கோலியோ?!

மேலும் செய்திகள்