உஷாரய்யா உஷாரு..

அவர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரும், அவரது மனைவியும் அரசின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றினார்கள்.

Update: 2017-12-10 02:39 GMT
வர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அவரும், அவரது மனைவியும் அரசின் வெவ்வேறு துறைகளில் பணியாற்றினார்கள். அவர்களுக்கு ஒரே மகன். உள்ளூரில் கல்லூரிப் படிப்பை முடித்த அவன், பின்பு மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்பினான். அப்போதே வெளிநாட்டிற்கு அனுப்ப தந்தை தயங்கினார். ‘எங்களுக்கு நீ ஒரே பிள்ளை.. நீ படித்திருக்கும் படிப்பிற்கு சொந்த ஊரிலே நல்ல வேலை கிடைக்கும். இங்கேயே வேலை பார்த்துக்கொண்டு, எங்களையும் கவனித்துக்கொள்’ என்றார். ஆனால் அவனோ வெளிநாடு சென்று படிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். தாயார் மூலமாக அப்பாவின் மனதைக் கரைத்து எப்படியோ வெளிநாட்டிற்கு படிக்க கிளம்பிவிட்டான்.

படிப்பு, அதன் பின்பு ஆராய்ச்சி என்று அங்கு வருடங்களை கடத்தினான். பெற்றோருக்கு வயதாகிக்கொண்டே இருந்தது. அங்கேயே ஏதாவது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு ‘செட்டில்’ ஆகிவிடுவானோ என்ற பயம் பெற்றோருக்கு ஏற்பட்டது. அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்காக ஆலயங்களை தேடிச்சென்று வழிபட்டுக்கொண்டிருந்தார்கள். அப்படி எதுவும் நடந்துவிடவில்லை. பெற்றோர் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்தான்.

தங்களைவிட வசதி குறைந்த இடத்தில் ஒரு பெண்ணை தேடிப் பிடித்தார்கள். ‘நீங்கள் வரதட்சணை எதுவும் தரவேண்டாம். கல்யாண செலவுகள் அனைத்தையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். அதற்கு பிரதிபலனாக எங்களுக்காக ஒரே ஒரு காரியம் செய்யவேண்டும். என் மகனிடம், ‘இனி வெளிநாட்டு வேலைக்கு செல்லவேண்டாம். இங்கேயே வேலை தேடிக்கொள்ளலாம் என்று கூறி, எங்களுடனே தங்கியிருக்க அவனை நீ சம்மதிக்கவைக்கவேண்டும்’ என்ற வேண்டுகோளை மணப்பெண்ணிடம் வைத்தார்கள். அவளும், ‘திருமணத்திற்கு பிறகு எப்படியாவது உங்கள் மகனின் மனதை மாற்றி இங்கேயே குடும்பம் நடத்தும் அளவிற்கு செய்துவிடுகிறேன்’ என்றாள். அந்த காலகட்டத்திலே அவர்கள் பணியில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

திருமணமும் நடந்தது. ஆனால் அவள் மனதிலும் வெளிநாட்டிற்கு செல்லவேண்டும் என்ற ஆசை இருந்திருக்கிறது. தேனிலவு போய்விட்டு திரும்பி விடுவதாக பொய் சொல்லிவிட்டு, எல்லா பயண ஏற்பாடுகளையும் செய்துகொண்டு வெளிநாட்டிலே செட்டில் ஆகிவிட்டார்கள். அங்கிருந்து கொண்டு சாக்குபோக்குகளை கூறி பெற்றோரை சமாளித்தான். மகனும், மருமகளும் சேர்ந்து தங்கள் உணர்வுகளைபுண்படுத்திவிட்டதாகவும், தங்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவனது பெற்றோர் கருதினார்கள்.

இப்போது அவர்கள் இருவருக்கும் தள்ளாடும் வயது. அவர்கள் இங்கிருந்து அனாதை போன்று சிரமப்பட, மகன் இரண்டு குழந்தைகளுக்கும் தந்தையாகிவிட்டான். இரண்டு பிரசவத்தையும் அங்கேயே முடித்துக்கொண்டார்கள். பெண்ணின் தாயார் அங்கு சென்று பிரசவத்தை கவனித்துவிட்டு ‘சைலண்டாக’ திரும்பி வந்து விட்டார்.

மகன், ஊரிலிருக்கும் பெற்றோரிடம் எப்போதாவது பேசுவது- பேரக் குழந்தைகளின் படங்களையும், குறும்புத்தனங்களையும் வீடியோ எடுத்து அனுப்புவது - ஊருக்கு வந்தாலும் நாலைந்து நாட்களில் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவது என்று போக்குகாட்டிக்கொண்டிருந்தான்.

சமீபத்தில் ஒரு நாள் பத்து இருபது பேர் மட்டும் பங்குபெற்ற திருமண வீடியோ ஒன்றை தந்தை, மகனுக்கு அனுப்பிவைத்தார். அதை பார்த்துவிட்டு மகன் போன் செய்து விளக்கம் கேட்க, ‘உன்னை இனியும் நம்பியிருக்க முடியாது என்பதால் எங்களுக்கான பாதுகாப்பை நாங்க தேடிக்கிட்டோம். கல்யாண வீடியோவில் இருக்கும் பெண்ணும், பையனும் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவங்க. அவங்களுக்கு நானே கல்யாணம் செய்துவைத்து எங்க வீட்டிலே குடிவைத்திருக்கிறோம். எங்க கையில் இருக்கிற பணம், பொருள், நகை எல்லாம் எங்க காலத்துக்கு பிறகு அவங்களுக்கே கிடைக்கிறது மாதிரி ஏற்பாடு செய்திட்டிருக்கோம். உனக்கு வெளிநாட்டில் இருப்பதுதான் மகிழ்ச்சியை தருகிறது. அதனால் நீ அங்கேயே இருந்துகொள். இனி எங்க வாழ்க்கையை நாங்க பார்த்துக்கிறோம். எந்த தேவைக்கும் இனி உன்னை அழைக்கமாட்டோம்..’ என்றார்.

மகன் வெலவெலத்துப்போனான். அப்பாவும், அம்மாவும் சேர்த்துவைத்த சொத்தெல்லாம் கையைவிட்டு போய்விடுமோ என்ற பெருங்கவலையுடன் அலைபாய்கிறான்.

பெற்றோர்களை தவிக்கவிட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டிலாகி விடும் மகன்களுக்கு இப்படியும் சில பெற்றோர்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கவனிச்சுக்குங்க..!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்