பாகூர் ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி

பாகூர் ஏரி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2017-12-10 04:31 IST

பாகூர்,

புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரியாக பாகூர் ஏரி உள்ளது. 3.6 மீட்டர் உயரமுள்ள இந்த ஏரியின் கொள்ளளவு 194 மில்லியன் கனஅடி. பருவமழை காலத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டில் இருந்து பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு தண்ணீர் வருவது வழக்கம். இந்த ஏரியின் மூலம் பாகூர், செலியமேடு, குடியிருப்புபாளையம் அரங்கனூர், குருவிநத்தம் உள்பட 15–க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெய்த வடகிழக்கு பருவ மழையால் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு, பங்காரு வாய்க்கால் வழியாக பாகூர் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கியது. நாளுக்கு நாள் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முழு கொள்ளளவான 3.6 மீட்டரை எட்டி, ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரி நிரம்பியது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி கூறுகையில், பாகூர் ஏரியில் தற்போது 194 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. இது சுமார் 4 மாதத்துக்கு விவசாய பாசனத்துக்கு பயன்படுத்தலாம். ஏரிக்கு வரும் உபரிநீர் அப்படியே அரங்கனூர் பங்காரி சிங்காரி வாய்க்கால் வழியாக வெளியேற்றப்படுகிறது. ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், பொதுப்பணித்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

மேலும் செய்திகள்