திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 16 பேர் கைது

திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-09 22:14 GMT
திண்டுக்கல்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல்.திருமாவளவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை பேசியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.

மேலும் தமிழகத்தில் சில இடங்களில் அவருடைய உருவபொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் அன்பரசு தலைமையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் திண்டுக்கல் பஸ்நிலையம் முன்பு குவிந்தனர்.

பின்னர் அவர்கள் எம்.ஜி.ஆர். சிலை அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த போராட்டத்தால் சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் ஒரு தனியார் மகாலில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

முன்னதாக கிழக்கு மாவட்ட செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அதில், கடந்த சில நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் மீது ‘வாட்ஸ் அப்’ மற்றும் ‘பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மர்ம நபர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். மேலும் அவரை தகாத வார்த்தையிலும் பேசி வருகின்றனர்.

இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவர், திருமாவளவனின் தலையை வெட்டி கொண்டு வருபவருக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று அறிவித்ததோடு, அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் பாடை எரிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொல்.திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்