இந்தியா வல்லரசாக மாறும் டி.ஐ.ஜி. தேன்மொழி பேச்சு

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது, இந்தியா வல்லரசாக மாறும் டி.ஐ.ஜி. தேன்மொழி பேச்சு.

Update: 2017-12-09 22:09 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் இலக்கிய களம் சார்பில் திண்டுக்கல்லில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், தினந்தோறும் கருத்தரங்கம், சிந்தனையரங்கம், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில் சிந்தனையரங்கம் நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் இலக்கிய களம் துணை தலைவர் சந்திரா தலைமை தாங்கினார்.

காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான், ஆண்-பெண் பேதமே பார்க்காத குடும்பத்தில் இருந்து வந்தவள். ஆசிரியர், தொலைதொடர்பு துறை, செவிலியர் ஆகிய பணிகளே பெண்களுக்கானது என்ற காலம் இருந்தது. தற்போது எல்லா துறைகளிலுமே பெண்கள் சாதித்து வருகிறார்கள். வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

தகுதி, திறமையின் அடிப்படையில் வேலை வழங்கினால், 90 சதவீத பணிகளை பெண்களே பெற்றுவிடுவார்கள். அவர்களுக்கும் ஆண்களை போல தைரியம், வீரம், கோபம், அன்பு போன்ற எல்லா உணர்வுகளும் உள்ளன. சமையல் போன்ற ஒரு குறிப்பிட்ட பணிகளை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற மனநிலையை மாற்ற வேண்டும்.

பெண்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்தாலே அவர்கள் மீதான குற்றங்கள் குறைந்துவிடும். இதற்கு மனதளவில் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வேலைக்கு சென்றால் தான் திருமணம் என்பது போன்ற ஏராளமான கட்டுப்பாடுகளும், சுமைகளும் ஆண்கள் மீது உள்ளன. பெண்கள் முன்னேற தயாராக இருக்கிறார்கள். அவர்களின் விருப்பம், தகுதியின் அடிப்படையில் சுயமாக முடிவெடுக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
2020-ம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்பது அப்துல்கலாமின் விருப்பம் ஆகும். ஆண்-பெண் பேதத்தை ஒழித்தால் மட்டுமே இந்தியா வல்லரசாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்