குறைந்த விலைக்கு வீடு விற்பதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி பெண் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு

குறைந்த விலைக்கு வீடுகள் விற்பதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2017-12-09 22:03 GMT

மும்பை,

குறைந்த விலைக்கு வீடுகள் விற்பதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ரூ.30 லட்சம் கொடுத்தார்

மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்தவர் அன்வர் சேக் (வயது 37). இவர் சொந்தமாக வீடு வாங்க விரும்பினார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த ரியல்எஸ்டேட் ஏஜெண்டுகளான காதர் சேக், சஜித் அன்சாரி ஆகியோரிடம் கூறியிருந்தார். இந்தநிலையில் டோங்கிரி பகுதியில் வீடு ஒன்று விற்பனைக்கு வந்து இருப்பதாக ஏஜெண்டுகள் 2 பேரும் அன்வர் சேக்கிடம் கூறினர். இதையடுத்து அன்வர் சேக் அந்த வீட்டை போய் பார்த்தார். அப்போது வீட்டில் பர்தாவுடன் பெண் ஒருவர் இருந்தார். அந்த பெண் அவசர தேவைக்காக ரூ.65 லட்சம் மதிப்பிலான வீட்டை ரூ.45 லட்சத்திற்கு விற்பதாக கூறினார். மேலும் உடனடியாக ரூ.30 லட்சம் தந்தால் வீட்டை தருவதாக கூறினார். இதைநம்பிய அன்வர் சேக் 2 நாட்களில் ரூ.30 லட்சத்தை தயார் செய்து அந்த பெண்ணின் வீட்டில் சென்று கொடுத்தார்.

4 பேருக்கு வலை

இந்தநிலையில் அடுத்த நாள் அன்வர் சேக் ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் மற்றும் வீட்டை விற்ற பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர்களது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சந்தேகமடைந்த அன்வர் சேக் தான் வாங்கிய வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அன்வர் சேக் விசாரித்த போது, ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் பெண்ணுடன் சேர்ந்து வேறு ஒருவரின் வீட்டை காட்டி ரூ.30 லட்சத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அன்வர் சேக் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட காதர் சேக், சஜித் அன்சாரி, பெண் சபினா மற்றும் இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்