நாசிக் போலீஸ் மைதானத்தில் முதல்–மந்திரி பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் நாசிக் போலீஸ் மைதானத்தில் அவசர அவரசமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-09 22:00 GMT

மும்பை,

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சென்ற ஹெலிகாப்டர் நாசிக் போலீஸ் மைதானத்தில் அவசர அவரசமாக தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவேந்திர பட்னாவிஸ்

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று நாசிக்கில் இருந்து அவுரங்காபாத்துக்கு ஹெலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி காலை 9.15 மணிக்கு நாசிக் போலீஸ் மைதானத்தில் இருந்து தனியார் ஹெலிகாப்டரில் ஏறி புறப்பட்டார். ஹெலிகாப்டரில் அவருடன் நீர்வளத்துறை மந்திரி கிரிஷ் மகாஜன், தேவேந்திர பட்னாவிசின் தனிப்பட்ட உதவியாளர் அபிமன்யு பவார் மற்றும் சமையல்காரர் சதீஷ் ஆகியோர் இருந்தனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நொடிகளில் அது குறிப்பிட்ட உயரத்தை தாண்டி மேலே பறப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வானில் பறந்தபடி ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது. இதனால், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். விபரீதத்தை உணர்ந்த விமானி, உடனடியாக புறப்பட்ட இடத்துக்கே ஹெலிகாப்டரை திருப்பி, அவசர, அவசரமாக அதனை தரையிறக்கினார்.

அதிக பாரம்

5 பேர் அமரக்கூடிய அந்த ஹெலிகாப்டரில், அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றியதே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியாமல், ஸ்தம்பித்ததற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சமையல்காரர் சதீஷ் இறக்கி விடப்பட்டார். சில பொருட்களும் ஹெலிகாப்டரில் இருந்து இறக்கி வைக்கப்பட்டது. அதன்பின்னர், அந்த ஹெலிகாப்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் திட்டமிட்டப்படி அவுரங்காபாத்தில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பயணிக்கும் ஹெலிகாப்டர்கள் விபரீதத்தை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த சில மாதங்களாகவே அவருக்கும், ஹெலிகாப்டருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது.

பட்னாவிசும், ஹெலிகாப்டரும்...

கடந்த ஜூலை 7–ந் தேதி மும்பையை அடுத்த அலிபாக்கில், அவர் ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு முன்பாகவே அதன் என்ஜினை விமானி இயக்கியதால், ஹெலிகாப்டரின் இறக்கை வேகமாக சுழல தொடங்கியது. இதனால், அதன் பக்கவாட்டில் நின்ற முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நிலைகுலைந்தார். உடனடியாக பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு, அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். மயிரிழையில், பட்னாவிஸ் உயிர் தப்பினார்.

முன்னதாக, மே 25–ந் தேதி லாத்தூர் மாவட்டம் நிலங்கா பகுதியில், பட்னாவிஸ் பயணித்த ஹெலிகாப்டர் புறப்பட்ட சில வினாடிகளில், ராட்சத மின்கம்பி மீது உரசி, லேசாக தீப்பிடித்து கரும்புகையை கக்கியது. இதனால், அந்த ஹெலிகாப்டர் நிலைகுலைந்து குடியிருப்பு பகுதியில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவர் காயமின்றி தப்பினார்.

இதேபோல், மே 10–ந் தேதி கட்சிரோலியில் இருந்து நாக்பூர் செல்வதற்காக ஹெலிகாப்டரின் வருகையை எதிர்பார்த்தபடி முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காத்திருந்தார். அப்போது, அவரை அழைத்து செல்வதற்காக கட்சிரோலி நோக்கி வந்த ஹெலிகாப்டர், ஹெலிபேடை நெருங்கும் முன்பு, தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதனால், முதல்–மந்திரி பட்னாவிஸ் சாலை மார்க்கமாக நாக்பூர் சென்றார்.

பரபரப்பு

தொடர்ச்சியாக பட்னாவிஸ் பயணித்த ஹெலிகாப்டர்கள் அனைத்தும் விபத்தை சந்தித்ததால், சில மாதங்களாக வான்வழி பயணத்தை தவிர்த்து சாலை மார்க்கமாக பயணம் மேற்கொண்டு வந்த அவர், தற்போது மீண்டும் ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கிய நிலையில், இதுவும் விபரீத விளைவுக்கு இட்டுச் சென்றது பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்