தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மைசூரு சிறையில் இருந்து மிரட்டிய கைதி சிக்கினார்

மைசூரு சிறையில் இருந்தபடி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கைதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-12-09 21:30 GMT

மைசூரு,

மைசூரு சிறையில் இருந்தபடி தொழில் அதிபரிடம் ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய கைதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொழில் அதிபருக்கு மிரட்டல்

மண்டியா டவுனைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் செல்போனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், ரூ.20 லட்சம் தனக்கு தர வேண்டும், பணத்தை தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன், அந்த பணத்தை தான் கூறும் நபரிடம் உடனடியாக கொடுத்துவிட வேண்டும் என்று கூறி மிரட்டினார்.

இதனால் பதற்றம் அடைந்த அந்த தொழில் அதிபர், இதுகுறித்து மண்டியா டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரிடம் புகார் செய்தார். புகாரின்பேரில் இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

செல்போன், சிம்கார்டுகள்

அதாவது, தொழில் அதிபருக்கு வந்த செல்போன் அழைப்பு மைசூரு சிறையில் இருந்து வந்திருந்தது தெரியவந்தது. அதனால் சிறையில் உள்ள யாரோ ஒரு கைதியே தொழில் அதிபரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நேற்று மண்டியா டவுன் போலீசார், மைசூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் மற்றும் மண்டி மொகல்லா போலீசாருடன் மைசூரு சிறைக்கு சென்றனர்.

பின்னர் அங்கு சிறை போலீசாருடன் இணைந்து ஒவ்வொரு அறையாக சென்று கைதிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது பசவராஜ் என்ற கைதியிடம் இருந்து 2 செல்போன்கள், 3 சிம் கார்டுகள், 135 கிராம் கஞ்சா பொட்டலங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

கைது

அப்போது அவர் வெளியில் உள்ள கூட்டாளியுடன் இணைந்து செல்போன் மூலம் தொழில் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பசவராஜை கைது செய்தனர். மேலும் சிறையில் இருந்த அவருடைய மற்றொரு கூட்டாளியான குமார் என்பவரிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்து 4 செல்போன்கள், 10 சிம்கார்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அவரையும் போலீசார் கைது செய்தனர். மைசூரு சிறையில் கைதிகளிடையே செல்போன்கள், சிம்கார்டுகள், கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்