டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி

உடுமலை அருகே டெங்கு காய்ச்சலுக்கு ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Update: 2017-12-10 02:00 GMT
குடிமங்கலம்,

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி. இவர்களின் மகன் மிதுன் (வயது 3½). இந்த நிலையில் நேற்று முன்தினம் மிதுனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

உடனே அவனை உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுமாறு பரிந்துரை செய்தனர். இதனால், அவர்கள் மிதுனை கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

அங்கு அவனுக்கு ரத்த பரிசோதனை செய்த போது, டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிறுவன் மிதுன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சிலர் கூறும் போது, சுகாதார சீர்கேடுகளால் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் சுகாதாரமான சுற்றுப்புறத்தை உருவாக்க வேண்டிய அதிகாரிகள் டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை மறைப்பதிலேயே தீவிரம் காட்டுகிறார்கள்.

உயிரிழப்புகளை முறையாக அறிவிப்பதன் மூலமே சுகாதாரப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த முடியும். எனவே இனியும் டெங்கு காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்துடன் அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்