குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக பா.ஜனதா குற்றச்சாட்டு கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னியை நீக்க முடிவு?

குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருவதால் மந்திரிசபையில் இருந்து கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னியை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2017-12-09 21:30 GMT

பெங்களூரு,

குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதாக பா.ஜனதா குற்றம்சாட்டி வருவதால் மந்திரிசபையில் இருந்து கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னியை நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஜே.ஜார்ஜ் மீது வழக்கு

குடகு மாவட்டத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த ஆண்டு (2016) துணை போலீஸ் சூப்பிரண்டு கணபதி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அவர் தற்கொலை செய்யும் முன்பு தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாப் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் ஆகியோர் தான் காரணம் என்று கூறி தனியார் கன்னட தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து, தனது மந்திரி பதவியை கே.ஜே.ஜார்ஜ் ராஜினாமா செய்தார்.

ஆனால் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, கணபதி தற்கொலைக்கும் கே.ஜே.ஜார்ஜிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார்கள். இதனால் கே.ஜே.ஜார்ஜ் மீண்டும் மந்திரி பதவி ஏற்றார். இந்த நிலையில், கணபதி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் பிரணாப் மொகந்தி, ஏ.எம்.பிரசாத் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

பா.ஜனதா வலியுறுத்தல்

இதனால் மந்திரி பதவியில் இருந்து கே.ஜே.ஜார்ஜை நீக்க வேண்டும் என்று பா.ஜனதாவினர் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக கோரி மாநிலம் முழுவதும் பா.ஜனதா சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதுபோல, தார்வார் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலரான யோகேஷ் கவுடா கொலை வழக்கில் மந்திரி வினய் குல்கர்னிக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா குற்றம்சாட்டி வருகிறார். அவரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆனால் மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னி எந்த தவறும் செய்யவில்லை, அதனால் அவர்கள் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை என்று முதல்–மந்திரி சித்தராமையா தொடர்ந்து கூறி வருகிறார். அந்த மந்திரிகளுக்கு ஆதரவாக மாநில தலைவர் பரமேஸ்வரும் இருந்து வருகிறார்.

மந்திரி பதவியில் இருந்து நீக்க முடிவு?

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற இருப்பதால், மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னி விவகாரத்தை கையில் எடுத்து பா.ஜனதாவினர் பெரிய அளவில் போராட்டம் நடத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த கூடும் என்று முதல்–மந்திரி சித்தராமையா, கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் கருதுவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னியை மந்திரிசபையில் இருந்து நீக்க முதல்–மந்திரி சித்தராமையா முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் உயர்மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர்கள் 2 பேரையும் மந்திரி பதவியில் இருந்து நீக்கினாலும், காங்கிரஸ் கட்சியில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும், அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் கே.ஜே.ஜார்ஜ், வினய் குல்கர்னி கூடிய விரைவில் தங்களது மந்திரி பதவிகளை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் செய்திகள்