கிருஷ்ணகிரி அணையில் உடைந்த ஷட்டரை அகற்றும் பணியில் தொடர்ந்து தாமதம்

கிருஷ்ணகிரி அணையில் உடைந்த ஷட்டரை அகற்றும் பணியில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Update: 2017-12-09 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அணையின் பிரதான மதகுகளில் முதல் மதகின் ஷட்டர் கடந்த 29-ந் தேதி உடைந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 20 அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது 32 அடி மட்டுமே தண்ணீர் உள்ள நிலையில், மதகில் உடைந்த ஷட்டரை அகற்றும் பணி கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இந்த பணி ஓரிரு நாட்களில் முடியும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரையில் மதகில் உள்ள முதல் ஷட்டரை அகற்றும் பணி முழுமையாக நிறைவடையவில்லை.

இந்த நிலையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் முருகு சுப்பிரமணியன் தலைமையில், முதன்மை பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் (பொறுப்பு) சண்முகம், உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) குமார் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்திர படகில், மதகில் ஷட்டர் உடைந்த பகுதிக்கு நேற்று மாலை சென்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

உடைந்த ஷட்டரை அகற்றி, புதிய ஷட்டர் அமைப்பதாக கூறினார்கள். ஆனால் இன்னும் உடைந்த ஷட்டர் அகற்றப்படவில்லை. இதன் பிறகு புதிய ஷட்டர் அமைத்து, பின்னர் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான், 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முடியும்.

ஆனால் இன்னும் ஷட்டர் அகற்றும் பணி முடிவடையாததால் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்