ரவி பெலகெரே கைது செய்யப்பட்டதற்கான காரணம் எனக்கு தெரியாது சித்தராமையா சொல்கிறார்
பிரபல பத்திரிகை அதிபர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று எனக்கு தெரியாது என முதல்–மந்திரி சித்தராமையா கூறினார். ஜனதா தரிசனம் முதல்–மந்திரி சித்தராமையா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார்.
மைசூரு,
பிரபல பத்திரிகை அதிபர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்று எனக்கு தெரியாது என முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.
ஜனதா தரிசனம்முதல்–மந்திரி சித்தராமையா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் தங்கினார். நேற்று காலையில் தனது வீட்டின் முன்பு ஜனதா தரிசனம் எனும் மக்கள் குறைகேட்பு முகாமை சித்தராமையா நடத்தினார்.
அதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்–மந்திரி சித்தராமையா, அதுபற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கேக் வெட்டி கொண்டாடினார்இதையடுத்து அவருடைய வீட்டின் முன்பு கூடியிருந்த தொண்டர்கள், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். அதில் கலந்து கொண்ட சித்தராமையா, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையாவிடம் நிருபர்கள், பிரபல பத்திரிகை அதிபர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசியபோது சித்தராமையா கூறியதாவது:–
விடுவித்து விடுவார்கள்பத்திரிகை அதிபர் ரவி பெலகெரே கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. அதுபற்றிய முழு விவரங்கள் இன்னும் எனக்கு வரவில்லை. நான் பெங்களூருவுக்கு சென்றபிறகு அதுபற்றிய தகவல்களை அறிந்து விசாரணை நடத்துவேன்.
ரவி பெலகெரே தவறு செய்திருந்தால் அதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அவர் மீது தவறு இல்லை என்றால் அவரை விடுவித்து விடுவார்கள். இதில் அரசியல் இடையூறு ஏதும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.