தியாகராயநகரில் துணிகரம்: தனியாக வசிக்கும் பெண் வீட்டில் வைர நகைகள் கொள்ளை

தியாகராயநகரில் தனியாக வசிக்கும் பெண் வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-12-09 23:45 GMT
சென்னை, 

சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையை சேர்ந்தவர் பிரேமா (வயது 69). இவருடைய 2 மகன்களும் அமெரிக்காவில் என்ஜினீயர்களாக உள்ளனர். மகள் திருமணமாகி லண்டனில் வசிக்கிறார். பிரேமா மட்டும் தனியாக உள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பிரேமா வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து, கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். 

பல லட்சம் வைர நகைகள் கொள்ளை

அவருடைய வீட்டில் இருந்த வைர செயின், வளையல், தோடு என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள், ரூ.20 ஆயிரம், வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். காலையில் எழுந்த பிரேமா வீட்டில் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து அவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து துணை கமி‌ஷனர் அரவிந்தன், உதவி கமி‌ஷனர் முத்தழகு ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து, வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகையை ஆய்வு செய்தனர். கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

வீட்டில் தனியாக வசிக்கும் பிரேமா, பெரும்பாலான நகைகள் மற்றும் பணத்தை வங்கி லாக்கரில் வைத்துள்ளார். 
இதனால் அந்த நகைகளும், பணமும் தப்பியது.

மேலும் செய்திகள்