சைதாப்பேட்டை– தேனாம்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்க ஜனவரியில் ஆய்வு
சைதாப்பேட்டை– தேனாம்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் இயக்குவது குறித்து ஜனவரியில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு முதல் வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை இடையே 22 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2–வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதில் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த 2 வழித்தடங்களில், 21.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு பறக்கும் பாதையிலும், 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்கப்பாதையிலும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சைதாப்பேட்டை– தேனாம்பேட்டை மற்றும் நேரு பூங்கா– சென்டிரல் ரெயில் நிலையம் இடையே உள்ள சுரங்கப்பாதையில் ஜனவரி மாதம் ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு ஆணையரும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க உள்ளார்.
ஜனவரியில் சோதனை
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:–
சென்டிரல் ரெயில் நிலையம்– நேரு பூங்கா (வழி எழும்பூர்) இடையே 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சுரங்கப்பாதை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி முற்றிலுமாக நிறைவடைந்துவிட்டன. அதேபோல் சைதாப்பேட்டை–தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி–டி.எம்.எஸ். வரையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் இம்மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் பெங்களூருவில் இருந்து பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்ய உள்ளார். இந்த ஆய்வு முடிந்த பிறகு, பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் ரெயில் போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
கூவம் ஆற்றின் கீழ் ஆய்வு
பாதுகாப்பு ஆணையருக்கு பணிகள் குறித்த ஆவணங்களை அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் நிறைவடைந்த உடன் இந்த ஆவணங்கள் பெங்களுரூவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. மே–தின பூங்கா– சென்டிரல் இடையே 1,040 மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.
இந்தப்பாதை அமைக்கும் போது கூவம் ஆற்றின் கீழ் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக 17 முதல் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி நடந்தது. ஆனால் கூவம் ஆற்றுக்கு அடியில் மட்டும் சுமார் 30 மீட்டர் ஆழத்துக்கு அடியில் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
சவாலான பணி
இந்த பணி மிகவும் சவாலாக இருந்தாலும் திட்டமிட்ட காலத்தில் பணியை முடித்துள்ளோம். மே–தின பூங்கா–தேனாம்பேட்டை இடையே நடந்து வரும் 2–வது சுரங்கப்பாதை பணி நிறைவடைந்த உடன் இந்தப்பாதையில் தண்டவாளம், சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து சென்டிரல் – விம்கோ நகர் இடையே 2019–ம் ஆண்டு ஜூன் மாதம் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் விம்கோநகர்– விமானநிலையம் வரை ரெயில்கள் இயக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.