மீன்பிடிக்க அனுமதிக்காததை கண்டித்து நடைபெற இருந்த சாலை மறியலை மீனவர்கள் கைவிட்டனர்

மீன்பிடிக்க அனுமதிக்காததை கண்டித்து நடைபெற இருந்த சாலை மறியல் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மீனவர்கள் கைவிட்டனர்.

Update: 2017-12-09 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

குமரிமுனையில் மையம் கொண்டிருந்த ஒகி புயல் காரணமாக தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடல் பகுதி சீற்றமாக இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனவர்கள் கடந்த 11 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள், கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் என 25 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

இந்த நிலையில் கடல் சீற்றம் தணிந்த பின்னரும் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கும் மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக மீன்பிடி அனுமதிக்கான டோக்கனை வழங்கக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட போவதாக சேதுபாவாசத்திரம், கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், காரங்குடா, மந்திரிப்பட்டினம், அண்ணாநகர், புதுத்தெரு, கணேசபுரம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் அறிவித்தனர். இதுதொடர்பாக மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சாலை மறியலில் ஈடுபடுவதற்காக சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மீனவர்கள் நேற்று திரண்டிருந்தனர். இதையொட்டி பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கோவிந்தராசு, பட்டுக்கோட்டை தாசில்தார் ரகுராமன், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் கண்காணிப்பாளர் ரெத்தினவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செங்கமலக்கண்ணன், பாரதிதாசன் ஆகியோர் மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., மீனவர் சங்க பிரதிநிதிகள் தாஜுதீன், ராஜமாணிக்கம், வடுகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தை கூட்டம், அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது. இதில் நாளை (திங்கட்கிழமை) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும், வேலையிழந்து தவிக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன்பேரில் மீனவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். 

மேலும் செய்திகள்