போலி டாக்டர் கைது கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை

கூத்தாநல்லூர் அருகே கோர்ட்டு உத்தரவின் பேரில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2017-12-09 23:00 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி ஆலிம் தெருவை சேர்ந்தவர் இக்பால்தீன் (வயது 51). இவர் பொதக்குடியில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவருடைய மருத்துவமனையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நாலாநல்லூரை சேர்ந்த சவுரிராஜ் (32) என்பவர் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சவுரிராஜ், இக்பால்தீனிடம் கடனாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கேட்டார். இந்த கடனுக்கு ஈடாக சவுரிராஜின் அசல் மருத்துவ படிப்பு சான்றிதழ்களை இக்பால்தீன் கேட்டார். அப்போது சவுரிராஜ் தனது மருத்துவ படிப்பு சான்றிதழ்களை வேறு ஒரு இடத்தில் வாங்கிய கடனுக்கு ஈடாக கொடுத்து உள்ளேன் என கூறினார்.

கைது

இதை நம்பிய இக்பால்தீன், சவுரிராஜிக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கடனாக கொடுத்துள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை குறித்த தேதியில் சவுரிராஜ் கொடுக்கவில்லை. மேலும் அவர் வேறு ஒரு மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். இதனால் சந்தேகம் அடைந்த இக்பால்தீன் சென்னை ஐகோர்ட்டில் சவுரிராஜ் மீது வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையில் சவுரிராஜ் முறையாக படித்த டாக்டர் இல்லை என்பதும், அவர் போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சவுரிராஜை கைது செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதன்பேரில் கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுரிராஜை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்