வங்கி முகவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வங்கி முகவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பழ.நெடுமாறன் பங்கேற்றார்.

Update: 2017-12-09 22:45 GMT
திருவண்ணாமலை,

சாத்தனூரில் உள்ள ஒரு வங்கியின் முகவர்களால் தாக்கப்பட்டு தண்டராம்பட்டு தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் (வயது 52) என்பவர் மரணம் அடைந்தார். அவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி நேற்று திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி நிறுவன தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிந்தனைச்செல்வன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் காளிதாசு, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், தண்டராம்பட்டு தாலுகா போந்தை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன் ஒரு வங்கியின் முகவர்களால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதற்கு காரணமான சாத்தனூர் ஸ்டேட் வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் முகவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஞானசேகரனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கரும்பு நிலுவை தொகையை வழங்க வேண்டும். விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அதில் ஞானசேகரனின் மனைவி, மகள்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்வளவன், மனித நேய ஜனநாயக கட்சி சபீர்அகமது உள்பட பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் ஞானசேகரனின் மூத்த மகள் மங்கையர்கரசி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்