மேற்கு தொடர்ச்சி மலையில் மழை: ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அடவிநயினார் அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அடவிநயினார் அணை நிரம்பியது.
தென்காசி,
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அடவிநயினார் அணை நிரம்பியது.
கனமழைநெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒகி புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பெரும்பாலான அணைகள் நிரம்பி விட்டன. நிரம்பாத அணைகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஒகி புயல் திசைமாறி சென்ற பிறகு மலைப்பகுதியில் மட்டும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வந்தது.
இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக கருப்பாநதி அணைப்பகுதி மற்றும் குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்தது. குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கருப்பாநதி அணையில் இருந்த வெளியேறிய தண்ணீரால் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.
அடவிநயினார் அணைகடனாநதி, ராமநதி, குண்டாறு, கொடுமுடியாறு, நம்பியாறு, கருப்பாநதி அணைகள் ஏற்கனவே நிரம்பி விட்டன. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு அணைகள் நிரம்பி வருகின்றன. 132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 123 அடியாக இருந்தது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் 9 அடி உயர்ந்து அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. அணைக்கு வந்து கொண்டிருந்த 100 கன அடி தண்ணீரும் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இந்த அணையின் மூலம் 7 ஆயிரத்து 643.15 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மணிமுத்தாறு அணைஇதுதவிர 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணைப்பகுதியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று 136 அடியாக இருந்தது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணையின் நீர்மட்டம் 141 அடியாக இருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணைப்பகுதியில் 45 மில்லி மீட்டர் மழை பதிவானது. அணையின் நீர்மட்டம் நேற்று 112 அடியாக இருந்தது. 50 அடி உச்சநீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 49 அடியாக இருந்தது.
நிரம்பிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியில் குறைந்த அளவு மழை பெய்த போதிலும், அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
2–வது நாளாக தடைகுற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று முன்தினம் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கு நேற்று காலையிலும் நீடித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம், புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் சுற்றுலா பயணிகள் நேற்று மாலை வரை குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
இதேபோன்று பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த ஒரு வாரமாக தடை விதிக்கப்பட்டு இருந்தது. அருவியில் நேற்று வெள்ளம் குறைந்தது. இதனால் அகஸ்தியர் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.