விளாத்திகுளம் வைப்பாற்றின் தடுப்பணையில் விரிசலால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது

விளாத்திகுளம் வைப்பாற்றின் தடுப்பணையில் ஏற்பட்ட விரிசலால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

Update: 2017-12-09 21:15 GMT

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் வைப்பாற்றின் தடுப்பணையில் ஏற்பட்ட விரிசலால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

வைப்பாறு தடுப்பணை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட துளசிபட்டி பகுதியில் வைப்பாற்றின் குறுக்கே கடந்த 2002–2003–ம் ஆண்டு சுமார் ரூ.2 கோடியே 40 லட்சம் செலவில் தடுப்பணை கட்டப்பட்டது. இதன் அருகில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அணை நிரம்பினால் திறந்து விடப்படும் தண்ணீரானது வைப்பாறு வழியாக முத்துலாபுரம், விளாத்திகுளம் வழியாக வைப்பாரில் கடலில் சங்கமிக்கும். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கன்குடி அணை நிரம்பியபோது, வைப்பாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு பரவலாக நல்ல மழை பெய்தும், இருக்கன்குடி அணை நிரம்பாததால், தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

விரிசல்களை சீரமைக்க கோரிக்கை

ஆனாலும் ஒகி புயலால் பெய்த பலத்த மழையில், விளாத்திகுளம் அருகே பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, கழுகாசலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பி, வைப்பாற்றின் தடுப்பணைக்கு தண்ணீர் வந்தது. ஆனாலும் தடுப்பணையின் அடிப்பகுதியில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டு, தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. மேலும் தடுப்பணை முழுவதும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் சில நாட்களில் தடுப்பணையில் தண்ணீர் முழுவதுமாக வற்றி விடும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

வானம் பார்த்த பூமியாக விளங்கும் விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி விவசாயத்தையே நம்பி உள்ளனர். இதனால் கிடைக்கும் தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே விளாத்திகுளம் வைப்பாற்றின் தடுப்பணையில் ஏற்பட்ட விரிசல்களை உடனே சீரமைக்க வேண்டும். வைப்பாற்றில் சீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்கி அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்