பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு: ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் போராட்டம்
பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாக குற்றஞ்சாட்டி வரகனேரி பகுதி மக்கள் ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்சி,
திருச்சி அருகே உள்ள வரகனேரி பகுதியில் மாநகராட்சி உடற்பயிற்சி கூடம் அருகே ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதி மக்கள் ரேஷன் கடையில் பொருட்களின் அளவு குறைவாக இருப்பதாக குற்றஞ்சாட்டி அந்த ரேஷன் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
இந்த ரேஷன் கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எடை குறைவாகதான் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு கிலோ சர்க்கரையை வேறு இடத்தில் எடை போட்டு பார்த்தால் 850 கிராம் தான் இருக்கிறது. இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் பல முறை புகார் கூறியும் மீண்டும் அதேபோலத்தான் வழங்குகிறார்கள்.
இதுகுறித்து மேல்அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர். இனிமேலாவது பொருட்கள் அனைத்தும் சரியான அளவில் வழங்க வேண்டும் என்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.