புயலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்

புயலில் சிக்கி மாயமான மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Update: 2017-12-08 23:05 GMT

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இவர்களை தேடும் பணியில் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிக்கக்கோரி மீனவ மக்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமச்சந்திரன், கூடுதல் கண்காணிப்பு அதிகாரிகள் ராஜேந்திரகுமார், ஜோதிநிர்மலா, கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங்பெடி ஆகியோரை சந்தித்து பேசினார். பின்னர் கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஒகி புயலால் இறந்த மீனவ குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், இறந்ததாக நம்பப்பட்டு உடல் கிடைக்காமல் இருக்கின்ற நபர்களின் குடும்பங்களுக்கு தகுந்த இழப்பீடு உடனே அறிவிக்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

பெருங்காற்று, புயல் மற்றும் பேரிடர்கள் பற்றி தெளிவான முன்னறிவிப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளுதல் அவசியம். காணாமல் போகும் மீனவர்களை தேடி கண்டுபிடிக்க ஹெலிகாப்டர் தளம் குளச்சல் அல்லது கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைக்க வேண்டும். கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அதிநவீன தகவல் தொடர்பு சாதனம் வழங்க வேண்டும். புயலால் சேதம் அடைந்த வாழை, ரப்பர் போன்ற விவசாய சேதத்திற்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மையமாக அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்