சேலத்தில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது
சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அசோசியேசன் சார்பில் தெய்வீகம் திருமண மண்டபத்தில் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
சேலம்,
சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்கம் மற்றும் சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் அறக்கட்டளை இணைந்து 19–ம் ஆண்டாக ‘பில்ட் எக்ஸ்போ–2017–18‘ என்ற பெயரில் கட்டுமான பொருட்கள் கண்காட்சியை சேலம் தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று தொடங்கியது.
விழாவுக்கு சேலம் சிவில் என்ஜினீயர்ஸ் சங்க தலைவர் டி.கதிரவன் தலைமை தாங்கினார். பில்ட் எக்ஸ்போ சேர்மன் கே.மயில்ராஜூ, டைரக்டரி ஒருங்கிணைப்பாளர் குப்புசாமி, எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர் ராஜூ, பொருளாளர் செல்வகுமார், இணை ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், இணை பொருளாளர் பிரேமானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி கட்டுமான பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர், பில்ட் எக்ஸ்போ டைரக்டரியை வெளியிட்ட அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த 180–க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் சங்க செயலாளர்கள் ஆர்.கணேசன்(நிர்வாகம்), டி.செல்வம்(செயலாக்கம்), பொருளாளர் சங்கர்குமார் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் சங்க அறக்கட்டளை சார்பாக இலவச மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. இதில் இலவச கண்பரிசோதனை, இலவச யோகா பயிற்சி ஆகியன நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை சங்க அறக்கட்டளை சேர்மன் செந்தில்குமார், செயலாளர் அசோகன் ஆகியோர் செய்திருந்தனர். பில்ட் எக்ஸ்போ கண்காட்சி தொடர்ந்து 11–ந் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக நிர்வாகிகள் கூறியதாவது:–
கட்டுமான பொருட்கள் கண்காட்சியில் 180–க்கும் அதிகமான அரங்குகளும், நவீன தொழில்நுட்ப பொருட்களும், வீடு கட்டும் வாடிக்கையாளர்களை கவரக்கூடிய வகையில் அமைந்து உள்ளது. கட்டுமானத்துறை சம்பந்தமான சிமெண்டு, இரும்பு, புதிய வகையிலான கதவு, ஜன்னல்கள், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சமையல் எரிவாயு, வீட்டின் உள் அலங்கார சாதனங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட்டு பயன்பெறலாம். 11–ந் தேதி வரை நடக்கும் கண்காட்சியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு கட்டுமான துறை சார்ந்த மாணவர்களின் படைப்புகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. 11–ந் தேதி இரவு 7 மணிக்கு கண்காட்சி நிறைவு பெறுகிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.