பாண்டுப்பில் ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி சாவு தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தகவல்

பாண்டுப்பில், ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர்.

Update: 2017-12-08 22:34 GMT

மும்பை,

பாண்டுப்பில், ரெயிலில் அடிபட்டு கல்லூரி மாணவி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரெயில்வே போலீசார் கூறினர்.

ரெயில் மோதியது

மும்பை பாண்டுப் ரெயில் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் இறங்கி ரெயில் வரும் திசையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த தண்டவாளத்தில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.

இளம்பெண் ரெயிலை நோக்கி வருவதை கவனித்த மோட்டார்மேன் அலாரம் எழுப்பினார். ஆனால் அந்த இளம்பெண் தண்டவாளத்தை விட்டு நகரவில்லை.

இதனால் வேகமாக வந்த அந்த மின்சார ரெயில் இளம்பெண் மீது மோதிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

கல்லூரி மாணவி

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், ரெயிலில் அடிபட்டு பலியான இளம்பெண் சாக்கிநாக்காவை சேர்ந்த கஜோல் மவுர்யா (வயது19) என்பதும், கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது.

கஜோல் மவுர்யா பாண்டுப்பில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரெயில்வே போலீசார் தெரிவித்து உள்ளனர். சம்பவம் தொடர்பாக குர்லா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்