விதிமுறைப்படி வாரியங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கிரண்பெடி அறிவுறுத்தல்
விதிமுறைப்படி வாரியங்கள் செயல்பட நட வடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி மாதந்தோறும் தலைமை செயலாளர், அரசு செயலாளர்கள், அரசுத்துறை இயக்குனர்களுக்கு கடிதம் எழுதுவதை வழக்கத்தில் கொண்டுள்ளார். இந்த மாதம் அவர் எழுதியுள்ள கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள பெரும்பான்மையான அரசுத் துறைகளில் மனித வளங்கள் மாற்றி பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வருகின்றது. இதை துறைத்தலைவர்கள் தடுக்க வேண்டும்.
அடுத்து வரும் காலங்களில் அரசு பணியாளர்கள் விவகாரத்தில் கவர்னர் மாளிகை கவனம் செலுத்த உள்ளது. ஊழியர்கள் குறித்த விவரங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. ஊழியர்கள் வகிக்கும் பதவி, தகுதி ஆகியவை இதில் இடம்பெற்று இருக்கும்.
இது பணியிட மாற்றம், பதவி உயர்வுகளில் சிறந்த மனித வளத்தை பயன்படுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். அனைத்து துறை ஊழியர்களுக்கும் மாதத்திற்கு ஒருமுறையாவது பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
விதிமுறைப்படி செயல்பட வேண்டும்
நிலுவையில் உள்ள கோப்புகளின் பிரச்சினைகளை தீர்க்கவும், மீன் அங்காடி போன்ற கட்டுமானம் முடிந்த அரசு கட்டிடங்களை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கைகளை நிறைவு செய்யவும், நிதியை விவேகத்துடன் செலவு செய்யவும், புதுவை அரசின் மானியத்தில் செயல்படும் சங்கங்களும், வாரியங்களும் விதிமுறைப்படி செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தியுள்ளார்.