ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு கொலை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ரவுடி கைது

ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரவுடியை 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது அம்பலமாகி உள்ளது.;

Update: 2017-12-08 21:57 GMT

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கொண்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது83). இவர் போலீஸ் ஏட்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். குணசேகரன் கடந்த 2015–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8–ந் தேதி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், குணசேகரனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுதொடர்பாக தகவல் அறிந்த பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது குணசேகரனின் தங்க சங்கிலியை காணவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீசார் கொலையாளியை கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் குணசேகரன் கொலை வழக்கு தொடர்பாக பட்டுக்கோட்டை மகாராஜசமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி கருப்பசாமியிடம் பட்டுக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த நாச்சிபழனி (40) என்பவர் சரண் அடைந்தார். இவர் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆவார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதையடுத்து போலீசாரிடம் நாச்சிபழனி ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நகைக்காக ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு குணசேகரனை கத்தியால் கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்றது அம்பலமானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, பட்டுக்கோட்டை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, நாச்சிபழனியை 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ரவுடி கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்