பாடியநல்லூரில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஆர்.டி.ஓ.-தாசில்தார் சிறை பிடிப்பு

பாடியநல்லூரில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வந்த ஆர்.டி.ஓ.-தாசில்தாரை பொதுமக்கள் 4 மணிநேரம் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-12-08 23:30 GMT
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி அருகே ஏரி உள்ளது. இந்த ஏரி அதிகமான பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மழை இல்லாமல் வறண்டுபோய் இருந்த இந்த ஏரியில் மண் திருட்டு, ஆக்கிரமிப்புகள் நடைபெற்றன.

இதுபற்றி பொதுமக்கள் தரப்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து பாடியநல்லூர் ஏரியின் மொத்த இடத்தை அளவீடு செய்யும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்படி கடந்த 5 நாட்களாக வருவாய்த்துறையினர் நில அளவையாளர்கள் மூலம் ஏரியை அளந்தனர். அதில் ஏரியின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

சிறை பிடிப்பு

இதையடுத்து ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதின்பேரில் நேற்று காலை பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி, கிராம நிர்வாக அதிகாரி ராமலட்சுமி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் பாடியநல்லூர் ஏரி அருகே உள்ள பாலாஜி நகர் பகுதிக்கு வந்தனர்.

அங்கு பட்டா இல்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த ஒரு வணிக வளாகத்தை இடித்து அகற்ற முயன்றனர். அப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக தகவல் அறிந்த பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் அதிகாரிகளை சிறை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செய்வதறியாது திகைப்பு

அப்போது ஆர்.டி.ஓ. முத்துசாமி, “பாலாஜி நகரில் உள்ள பட்டா இடங்களையோ, அதில் கட்டப்பட்ட வீடுகள், வணிக வளாகங்களையோ இடிக்க மாட்டோம். பட்டா இல்லாமல் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களைதான் இடிக்கப்போகிறோம்” என்றார்.

ஆனால் அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், நாங்கள் யாரும் ஏரியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. எதையும் இடிக்க கூடாது என்று கூறி தொடர்ந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆர்.டி.ஓ., தாசில்தார் இருவரும் செய்வதறியாது திகைத்தனர்.

ஆர்.டி.ஓ.-இன்ஸ்பெக்டர் வாக்குவாதம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் புழல் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்தனர். அப்போது இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, ஆர்.டி.ஓ. முத்துசாமியிடம், “போலீசாருக்கு தெரிவிக்காமல் எதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தாய்?” என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆர்.டி.ஓ. வுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நாங்கள் முறையாக போலீஸ் பாதுகாப்பு கேட்டும், வழங்காமல் விட்டது உங்கள் தவறு என்று ஆர்.டி.ஓ. கூறினார்.

உடனே அங்கிருந்த பொதுமக்களும் கோஷமிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

4 மணி நேரம்

இதையடுத்து ஆர்.டி.ஓ., தாசில்தார் இருவரும் அங்கிருந்த ஒரு அறையில் சென்று அமர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல் 4 மணி நேரம் பொதுமக்கள் சிறை வைத்தனர். அப்போது ஆர்.டி.ஓ. “நீங்கள் என்ன செய்தாலும் பட்டா இல்லாமல் கட்டப்பட்ட 6 கட்டிடங்களை இடிக்காமல் இங்கிருந்து நாங்கள் செல்ல மாட்டோம்” என உறுதியாக கூறினார். மதியம் 2 மணிவரையில் இந்த போராட்டம் நீடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, ஆர்.டி.ஓ. முத்துசாமியை போனில் தொடர்புகொண்டு, “வருகிற திங்கட்கிழமைக்குள் பட்டா வைத்து உள்ள அனைவரும் அதை ஆர்.டி.ஓ.விடம் காண்பித்து உறுதி செய்து கொள்ளலாம். அதுவரை காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன்பிறகு ஏரியில் ஆக்கிரமித்து வீடுகளோ, வணிக வளாகங்களோ கட்டப்பட்டு இருந்தால் உறுதியாக அகற்றப்படும்” என்றார்.

இதை அவர், பொதுமக்களிடம் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் ஆர்.டி.ஓ., தாசில்தாரை விடுவித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். 

மேலும் செய்திகள்