பனியன் பண்டல்களுடன் லாரியை கடத்தி சென்ற மர்ம ஆசாமி

திருப்பூரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பனியன் பண்டல்களுடன் லாரியை கடத்தி சென்ற ஆசாமியை போலீசார் துரத்தி சென்றனர். அப்போது அந்த ஆசாமி லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

Update: 2017-12-08 23:00 GMT
அவினாசி,

திருப்பூர் அணைக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 42). இவர் சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரு டைய லாரி புக்கிங் அலுவலகம் திருப்பூர்-ஊத்துக்குளி சாலை யில் உள்ளது. கந்தசாமிக்கு சொந்தமான லாரியில் டிரைவராக ஜக்ரியா இருந்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள பனியன் பண்டல்கள் கந்தசாமிக்கு சொந்தமான லாரியில் ஏற்றப்பட்டன. பின்னர் அந்த லாரி திருப்பூரில் இருந்து ஐதராபாத்துக்கு டிரைவர் ஜக்ரியா ஓட்டிச்சென்றார். இந்த லாரி திருப்பூர்- ஊத்துக்குளி சாலையில் உள்ள கந்தசாமிக்கு சொந்தமான புக்கிங் அலுவலகம் சென்றதும், லாரியை சாலை ஓரமாக ஜக்ரியா நிறுத்தி விட்டு, சாவியை எடுக்காமல் லாரியில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று விட்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஜக்ரியா வந்து பார்த்தபோது லாரியை காணவில்லை. யாரோ மர்ம ஆசாமி லாரியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜக்ரியா, இது குறித்து லாரி உரிமையாளருக்கும், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் அனைத்து போலீஸ் நிலையங் களுக்கும், சோதனை சாவடி களுக்கும் மைக் மூலம் லாரி யின் பதிவு எண் குறித்து தகவல் தெரிவித்தனர். மேலும் நெடுஞ்சாலை ரோந்து போலீ சாருக்கும் தகவல் தெரிவிக் கப்பட்டது.

இந்த நிலையில் அவினாசி நெடுஞ்சாலைத்துறை போலீசார் அவினாசியில் இருந்து பெருமாநல்லூர் வரை காரில் ரோந்து சென்றனர். அப்போது பெரியாயிபாளை யம் பிரிவு அருகே சர்வீஸ் சாலையில் நேற்று மாலை 6.45 மணிக்கு சரக்கு ஏற்றிய நிலையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரி அருகே சென்று போலீசார் பார்த்தபோது, அந்த லாரி போலீஸ் கட்டுப் பாட்டு அறையில் கண்டு பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்ட லாரியின் பதிவு எண் என்று தெரியவந்தது.

இதையடுத்து ரோந்து சென்ற போலீசார் அந்த லாரி முன்பு சென்று காரை நிறுத்தினார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு, கிளனர் இருக்கும் இருக்கை பகுதியில் உள்ள கதவை திறந்து கொண்டு லாரியில் இருந்து குதித்து தப்பி ஓடினார். உடனே போலீசாரும் அந்த ஆசாமியை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார்கள். அந்த பகுதியில் புதர் மண்டிக்கிடந்ததால், ரோட்டின் கீழ் பதிக்கப்பட்டு இருந்த குழாய் வழியாக புகுந்து மறுபக்கத்திற்கு சென்று தப்பி ஓடிவிட்டார்.

இதனால் அந்த ஆசாமியை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. தப்பி ஓடிய ஆசாமிக்கு 25 வயது இருக்கும் என்றும், அவர் கருப்பு மற்றும் மஞ்சள் கலந்த கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸ் பேண்டும் போட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆசாமியை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்