மர்ம காய்ச்சலால் விமானப்படை வீரர் மரணம் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்

விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தபோது மர்ம காய்ச்சலால் விமானப்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார்.

Update: 2017-12-08 21:30 GMT

ஹலகூர்,

விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தபோது மர்ம காய்ச்சலால் விமானப்படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். அவரது உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

விமானப்படை வீரர்

மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே ஹலசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகண்ணா. இவரது மனைவி தேவம்மா. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் மூத்த மகன்தான் மகாதேவசாமி. இவர் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்தார். தற்போது அவர் காஷ்மீரில் செயல்பட்டு வரும் விமானப்படை முகாமில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக் கொண்டு ராணுவ முகாமில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். அப்போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஹலகூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பெற்றோரிடம் ஒப்படைப்பு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு எந்த விதமான நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. காய்ச்சல் மட்டும் குறையாமல் அப்படியே இருந்து வந்தது. அது என்ன காய்ச்சல் என்று மர்மமாக உள்ளது. இதற்கிடையே மகாதேவசாமியின் உடல்நிலையும் மோசமடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி மகாதேவசாமி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், மகாதேவசாமியின் உடலை தங்கள் வீட்டிற்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இறுதி அஞ்சலி

இதில் மண்டியா மாவட்ட நிர்வாகம் சார்பில் தாசில்தார் தினேஷ் சந்திரா, அரசு அதிகாரி மகாதேவு உள்பட ஏராளமான அரசு அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டு மகாதேவசாமிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவருடைய உடல் கிராமத்தையொட்டிய சுடுகாட்டில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்